சென்னை தண்டையார்பேட்டையில் பணம் வைத்து சூதாட்டம் - 27 பேர் கைது
சென்னை தண்டையார்பேட்டையில் பணம் வைத்து சூதாட்டம் நடத்திய 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெறுவதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு உதவி ஆய்வாளர் புகாரி மற்றும் குமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 27 நபர்கள் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீட்டை வாடகைக்கு எடுத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தை நடத்தி வந்துள்ளனர். மேலும் உறுப்பினர் அடிப்படையில் மாதாமாதம் பணம் கட்டி விளையாடி வந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த வீட்டில் இருந்து 13 சீட்டுக் கட்டுகள், 'போக்கர்' எனப்படும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்படும் 825 சில்லுகள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து அங்கிருந்த 27 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை தண்டையார்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.