ஆடிட்டரிடம் ரூ.65 ஆயிரம் நூதன மோசடி


ஆடிட்டரிடம் ரூ.65 ஆயிரம் நூதன மோசடி
x

ராமநாதபுரம் அருகே வங்கியில் இருந்து அனுப்புவதுபோல் லிங்க் அனுப்பி ஆடிட்டரிடம் ரூ.65 ஆயிரம் நூதன மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருகே வங்கியில் இருந்து அனுப்புவதுபோல் லிங்க் அனுப்பி ஆடிட்டரிடம் ரூ.65 ஆயிரம் நூதன மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குறுந்தகவல்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மீசல் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் தெய்வேந்திரன் (வயது51). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர் தனது சம்பளம் மற்றும் குடும்ப தேவைக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.

இந்தநிலையில் அவரின் செல்போன் எண்ணிற்கு கடந்த 3 நாட்களுக்குமுன் வங்கியில் இருந்து பான் கார்டு இணைக்காமல் உள்ளதால் வங்கி கணக்கினை நிறுத்தம் செய்ய போவதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. வேலை காரணமாக பான்கார்டினை இணைக்க மறந்துவிட்டதாக பதட்டம் அடைந்த தெய்வேந்திரன் அந்த குறுஞ்செய்தியுடன் வந்த லிங்கை தொட்டு அதனுள் சென்றுள்ளார்.

அந்த லிங்க்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தனது வங்கி கணக்கு, ஏ.டி.எம். கார்டு உள்ளிட்ட தேவையான விவரங்கள் அனைத்தையும் 3 தடவை பதிவு செய்துள்ளார். பதிவு செய்து முடித்ததும் அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் எடுக்கப்பட்டதாக வந்த தகவலை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

புகார்

இதனால் எல்லோரையும் போல தன்னையும் பதட்டமடைய வைத்து மோசடி வளையில் சிக்க வைத்து பணத்தை எடுத்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அவரின் புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வங்கியில் இருந்து பான்கார்டு, ஆதார்கார்டு இணைக்கும் படியோ, ஏ.டி.எம். கார்டு செயலிழந்துவிட்டது என்றோ எந்த குறுஞ்செய்தியும் யாருக்கும் அனுப்ப மாட்டார்கள், அவ்வாறு ஏதாவது குறுஞ்செய்தியோ, லிங்க் இணைப்போ வந்தால் உடனடியாக அவரவர் வங்கிக்கு சென்று அதனை உறுதிப் படுத்தி அவ்வாறு தேவைப்பட்டால் வங்கியில் இருந்தே அதனை செய்துகொள்ள வேண்டும்.

செல்போனிற்கு வரும் எந்த லிங்க் இணைப்பையும் உள் சென்று பார்த்தால் உங்களின் பணம் உள்ளிட்டவைகளை இழக்க நேரிடும் என்று சைபர்கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story