கிணத்துக்கடவில் கந்தசஷ்டி விழா:பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்- திரளான பக்தர்கள் தரிசனம்

கிணத்துக்கடவில் கந்தசஷ்டி விழாவையொட்டி பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் கந்தசஷ்டி விழாவையொட்டி பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொன்மலை வேலாயுதசுவாமி
கிணத்துக்கடவில் கோவை -பொள்ளாச்சி மெயின்ரோட்டின்அருகே உள்ள மலைமீது பிரசித்தி பெற்ற பொன்மலை வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டிவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 25-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 28-ந் இரவு விளக்குபூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சூரனை வதம் செய்ய கிணத்துக்கடவு பஸ் நிலையம் எதிரே உள்ள கரிய காளியம்மன் கோவில் சென்று வேல் வாங்கும் உச்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வேலாயுதசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.நேற்று மதியம் வேலாயுதசுவாமிக்கு உச்சிகால சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலை கோவை -பொள்ளாச்சி மெயின்ரோட்டில் சிவலோகநாதர் கோவில் முன்பு வேலாயுதசுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரவிழா நடைபெற்றது.
வதம் செய்யும் நிகழ்ச்சி
அதன்படி வேல் கொண்டு வேலாயுத சுவாமி சூரனை வதம் செய்தார். நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) 12.30 மணிக்கு பொன்மலை மீது வேலாயுதசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு வேலாயுதசுவாமி வள்ளி-தெய்வானையுடன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் மஹா அபிஷேக தீப ஆராதனை பூஜையுடன் கந்தசஷ்டிவிழா நிறைவடைகிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ணமன்றாடியார், செயல் அலுவலர் கந்தசாமி மற்றும் சஷ்டி வழிபாட்டு குழுவினர் செய்தனர்.






