மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை தற்காலிகமாக அகற்றம்


மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை தற்காலிகமாக அகற்றம்
x

சென்னை மெட்ரோ ரெயில் பணி காரணமாக மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் அதே இடத்தில் காந்தி சிலை நிறுவப்பட உள்ளது.

சென்னை,

சென்னையில் மெரினா கடற்கரை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 26.1 கி.மீ. வழித்தடத்தில் 4-வது மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் பாலம் வரை உள்ள வழித்தடத்தில் பூமிக்கு அடியில், அதாவது சுரங்கப்பாதையில் 9 மெட்ரோ ரெயில் நிலையங்களும், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட வழித்தடத்தில் 18 ரெயில் நிலையங்களும் என 27 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மெரினா கடற்கரையில் காந்தி சிலை இருக்கும் பகுதியின் அடியில், சுரங்கத்தில் கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அமைகிறது. இதற்காக அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு ராட்சத கிரேன்கள், சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் மூலம் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

காந்தி சிலை அகற்றம்

மெட்ரோ ரெயில் பணி காரணமாக காந்தி சிலை மண் துகள்களால் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக மூடப்பட்டன. மேலும் கட்டுமான பணியின்போது காந்தி சிலைக்கு எந்தவித சேதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அதை பாதுகாப்பான முறையில் அங்கிருந்து அகற்றி மாநகராட்சி ரிப்பன் மாளிகை அல்லது கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தற்காலிகமாக வைக்கலாமா? என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆனால் சிலையை எடுத்து வாகனத்தில் ஏற்றி வேறொரு இடத்தில் இறக்கும்போது சிலை சேதம் அடைந்து விடுமோ? என்ற அச்சம் அதிகாரிகள் மத்தியில் எழுந்தது. எனவே தற்போது காந்தி சிலை இருக்கும் இடத்தில் இருந்து 25 மீட்டர் அருகில் பாதுகாப்பான முறையில் சிலையை வைப்பது என்று மெட்ரோ ரெயில் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு பொதுப்பணித்துறை, மாநகராட்சி அதிகாரிகளும் இசைவு தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலையில் காந்தி சிலை பீடத்தில் இருந்து அகற்றப்பட்டு அதே இடத்தில் பாதுகாப்பான முறையில் கன்டெய்னர் பெட்டியில் வைக்கப்பட்டது. பீடத்தில் இருந்த திறப்பு விழா கல்வெட்டும் சேதம் அடையாமல் அகற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டது. இப்பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் முடிந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் காந்தி நிலை நிறுவப்பட்டு, அதே கல்வெட்டு பொறிக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேரு திறந்தது

தற்போது தற்காலிகமாக அகற்றப்பட்ட காந்தி சிலை, சென்னை நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்தது. இந்த சிலை 12 அடி உயரம் கொண்டது. 1959-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் காமராஜர் முன்னிலையில் நாட்டின் அன்றைய பிரதமர் நேரு திறந்து வைத்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

மெட்ரோ ரெயில் பணிகளும், நகரும் காந்தி சிலைகளும்

மெரினா கடற்கரையில் தற்போது அகற்றப்பட்டுள்ள காந்தி சிலையை வடிவமைத்து கொடுத்தவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரபல ஓவியரும், சிற்பியுமான தேவி பிரசாத் ராய் சவுத்ரி ஆவார். இவர் எழும்பூரில் உள்ள அரசு கவின் கல்லூரி முதல்வராக இருந்தபோதுதான் இந்த சிலையை தத்ரூபமாக செதுக்கினார்.

தேவி பிரசாத் ராய் சவுத்ரியின் கை வண்ணத்தை பார்த்து வியப்படைந்த மேற்கு வங்காள அரசும், இதேபோன்று ஒரு காந்தி சிலையை வடிவமைத்து தருமாறு அன்பு கட்டளை பிறப்பித்தது. அந்த வேண்டுகோளை ஏற்று சென்னையில் இருப்பது போன்ற காந்தி சிலையை தேவி பிரசாத் ராய் சவுத்ரி வடிவமைத்து கொடுத்தார். அந்த சிலை கொல்கத்தாவில் பார்க் தெரு என்ற இடத்தில் இருக்கிறது.

அந்த சிலை அங்கு நடைபெற்ற மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது. பணிகள் முடிந்த பிறகு மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது. அதேபோன்று சென்னையில் இருக்கும் காந்தி சிலையும் மெட்ரோ ரெயில் பணிக்காக தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது.

அதே இடத்தில் மீண்டும் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story