மெட்ரோ ரெயில் பணிக்காக மெரினா காந்தி சிலை இடமாற்றம்


மெட்ரோ ரெயில் பணிக்காக மெரினா காந்தி சிலை இடமாற்றம்
x

சென்னை கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் பணிக்காக காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட இருக்கிறது.

மெட்ரோ ரெயில் பணி

சென்னையில் 2-வது கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்றது. இதில் 4-வது வழித்தடம் மெரினா கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதையில் அமைகிறது.

தற்போது மெரினா கலங்கரை விளக்கம் அருகே மெட்ரோ ரெயில் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த இடத்தின் அருகே மகாத்மா காந்தி சிலை இருக்கிறது. ராட்சத எந்திரங்கள் மூலம் சுரங்கப்பாதை அமைக்கும்போது இந்த சிலை சேதம் அடைந்து விடக்கூடாது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காந்தி சிலையை தற்காலிகமாக வேறு இடத்தில் நிறுவுவதற்கு மெட்ரோ ரெயில் அதிகாரிகள் திட்டமிட்டனர்.

காந்தி ஜெயந்தி அன்று அரசு சார்பிலும், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் இங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்பதால் இந்த சிலையை பொது இடத்தில் அதாவது மெரினாவிலேயே வேறு இடத்தில் நிறுவலாமா? அல்லது மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை நுழைவுவாயில் அருகே நிறுவலாமா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் சற்று தொலைவிலே காந்தி சிலையை மாற்றி அமைப்பது என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. காந்தி சிலையை இடமாற்றம் செய்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே காந்தி சிலை மற்றும் பீடம் தனித்தனியாக கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டு விரைவில் வேறு இடத்தில் நிறுவப்பட உள்ளது.


Next Story