காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர்கள் தர்ணா
பதிவாளர் பதவி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரி, காந்திகிராம பல்கலைக்கழக பேராசியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பதிவாளருக்கு பதவி நீட்டிப்பு
திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருப்பவர் சிவக்குமார். இவரது பதவிகாலம், 2-வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதாவது 6 மாத கால பதவி நீட்டிப்பு, நேற்று முன்தினத்தோடு முடிவடைந்து விட்டது. இந்தநிலையில் மேலும் சிவக்குமாருக்கு 3 மாத காலம் பதவி நீட்டிப்பு செய்து, கூடுதல் பொறுப்பு துணைவேந்தர் குர்மித்சிங் உத்தரவிட்டுள்ளார்.
பேராசிரியர்கள் தர்ணா
பதவி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பல்கலைக்கழக பெல் மைதானம் அருகே திடீர் தர்ணா போராட்டம் நடந்தது. சுமார் 1 மணி நேரம் நடந்த போராட்டத்துக்கு பிறகு பேராசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் உள்ள அறையில் பேராசிரியர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் 40-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆலோசனைக்கு பிறகு ஆசிரியர் சங்க தலைவர் பேராசிரியர் ராஜாபிரான்மலை நிருபர்களிடம் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை தலைமைக்கு அனுப்பி உள்ளோம். ஒரு வார காலத்துக்குள் முடிவு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக தொடர் போராட்டம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுடன் கலந்து பேசி முடிவு செய்வோம் என்றார்.
கல்வித்தகுதி அடிப்படையில்...
இதேபோல் தர்ணா போராட்டம் குறித்து கூட்டுறவுத்துறை பேராசிரியர் மணிவேல் கூறுகையில், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பிசியோதரபிஸ்ட் படித்த சிவக்குமார் பதிவாளராக பதவியில் உள்ளார். இவரது கல்வித்தகுதி குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய தணிக்கை துறை குழுவினர் கேள்வி எழுப்பினர். கல்வித்தகுதி இல்லாத ஒருவருக்கு மீண்டும், மீண்டும் பணி நீட்டிப்பு செய்வதை கண்டிக்கிறோம். அவரது பதவி நீட்டிப்புக்கான உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் கல்வித்தகுதியின் அடிப்படையில் புதிய பதிவாளரை நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என்றார்.