திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்; வீடு, கோவில்களில் சிறப்பு வழிபாடு


தினத்தந்தி 19 Sept 2023 2:30 AM IST (Updated: 19 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. வீடு, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. வீடு, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, திண்டுக்கல்லில் உள்ள விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாவையொட்டி கோவில் முழுவதும் பூப்பந்தல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருள்களால் அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் நடந்தது. பின்னர் பகல் 12 மணியளவில் உச்சி கால பூஜை, தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலையில் சுவாமிக்கு சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரம் நடைபெற்று இரவு 7 மணியளவில் அலங்கார மின்தேர் வீதிஉலா தொடங்கி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோவிலை அடைந்தது.

சந்தனகாப்பு அலங்காரம்

திண்டுக்கல் கோபாலசமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில், 108 விநாயகர் மற்றும் 32 அடி உயர சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு 500-க்கும் மேற்பட்ட வண்ண விளக்குகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு இன்னிசை கச்சேரி நடந்தது.

திண்டுக்கல் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள அக்கசாலை விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாவையொட்டி காலை 6 மணியளவில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு பகல் 12 மணியளவில் உச்சி கால பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் சுவாமிக்கு சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

வீடுகளில் வழிபாடு

திண்டுக்கல் நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், சவுராஷ்டிராபுரம் விநாயகர் கோவில், மேற்கு ரதவீதி மொச்சை கொட்டை விநாயகர் கோவில், பழனிரோடு கலைக்கோட்டு விநாயகர் கோவில், ரவுண்டு ரோடு நவசக்தி விநாயகர் கோவில், பாலகிருஷ்ணாபுரம் கன்னிமூல கணபதி கோவில், வினைதீர்க்கும் விநாயகர் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சதுர்த்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

இதேபோல் திண்டுக்கல்லில் பொதுமக்கள் தங்களது இல்லங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் விநாயகர் படங்களை வைத்து சுண்டல், கொழுக்கட்டை படைத்து சதுர்த்தி விழாவை கொண்டாடினர். மேலும் அக்கம்பக்கத்தினர், நண்பர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

பழனி மலைக்கோவில்

பழனி மலைக்கோவிலில் உள்ள ஆனந்த விநாயகர் சன்னதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று காலை சிறப்பு யாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சுவாமிக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஆனந்த விநாயகர் வெள்ளி கவச அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர் ஹரிகரமுத்து உள்பட நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணி மற்றும் குருக்கள்கள் செய்தனர்.

இதேபோல் திரு ஆவினன்குடி கோவிலில் உள்ள விநாயகர் சன்னதி, பட்டத்து விநாயகர் கோவில், சண்முகபுரம் சித்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நத்தம்

நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மேலும் அங்குள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல் நத்தத்தில் உள்ள பெரிய விநாயகர், வெற்றி விநாயகர், லட்சுமி விநாயகர் உள்ளிட்ட அனைத்து விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கொடைக்கானல்

கொடைக்கானல் ஆனந்தகிரியில் உள்ள சித்தி விநாயகர், நாயுடுபுரம் விநாயகர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. மேலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. மேலும் வீடுகளில் பொதுமக்கள் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்தனர்.


Next Story