விநாயகர் சதுர்த்தி விழாவில் ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக்கூடாது கலெக்டர் மோகன் அறிவுரை
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக்கூடாது என கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.
ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
விநாயகர் சிலையை நிறுவ உள்ள அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சம்பந்தப்பட்ட சப்-கலெக்டர், கோட்டாட்சியரிடம் தடையின்மை சான்று பெற வேண்டும். இந்த தடையின்மை சான்றினை பெறுவதற்கு ஒற்றைச்சாளர முறையில் வருகிற 28-ந் தேதி மாலை 4 மணி வரை விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம், திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். புதிய இடங்களில் சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கப்படாது.
10 அடிக்கு மிகாமல்
மேலும் நிறுவப்படும் விநாயகர் சிலையானது தூய களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக்கூடாது. நீரில் கரையக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலை வைப்பதற்கான அரங்குகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிலை நிறுவப்பட்டுள்ள இடத்தில் தேவையான முதலுதவி, மருத்துவ வசதிகள் இருப்பதை அமைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பொது இடங்களில் நிறுவப்படவுள்ள விநாயகர் சிலை 10 அடிக்கும் மிகாமல் இருக்க வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. விநாயகர் சதுர்த்தி வழிபாட்டின்பேரில் சட்டத்திற்கு புறம்பான செயல்களை அமைப்பாளர்கள் அனுமதிக்கக்கூடாது. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவோ, சமுதாய கட்சி தலைவர்களுக்கு ஆதரவாகவோ விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது. சிலையின் பாதுகாப்பிற்காக 2 தன்னார்வ தொண்டர்களை 24 மணி நேரமும் பணியில் அமர்த்த வேண்டும்.
ஒத்துழைப்பு
மேலும் சாதிய வெறுப்புகளை தூண்டக்கூடிய முழக்கங்களை எழுப்பக்கூடாது, எக்காரணத்தை கொண்டும் மத அடிப்படையிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் பிற மதத்தினரின் மனதை புண்படுத்திடும்படியான செயல்களை அனுமதிக்கக்கூடாது. சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள் கரைப்பதற்காக எடுத்துவிட வேண்டும். காவல்துறையினரால் அனுமதி அளிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சிலைகள் ஊர்வலம் செல்ல வேண்டும். சிலை நிறுவப்பட்ட இடங்கள், கரைக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. இந்த வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.