விநாயகர் சதுர்த்தி விழா


விநாயகர் சதுர்த்தி விழா
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை
ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி தினத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்கள் களையிழந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் வளர்பிறை சதுர்த்தி தினமான நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பொது இடங்களில் பல்வேறு அளவுகளில் மற்றும் பல வண்ணங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதேபோல் வீடுகளிலும் பல வடிவங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

கோவில்களில் சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கூறைநாட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் கஜ பூஜை நடைபெற்றது. மாயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை வரவழைக்கப்பட்டு, சிவவாத்தியங்களுடன் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டது. அப்போது யானைக்கு வெள்ளி கொலுசு அணிவித்து மாலை அணிவிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் யானைக்கு பழங்கள், சர்க்கரை பொங்கல் வழங்கியும் ஆசி பெற்றனர். பின்னர் வீடுகள்தோறும் யானையை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

சிறப்பு அபிஷேகம்

மயிலாடுதுறை மாயூரநாதர் மேலவீதியில் உள்ள செல்லப் பிள்ளையார் கோவிலில் உள்ள விநாயருக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகள் கோதண்டராமன் குருக்கள் தலைமையில் நடந்தது. இதே போல நகரில் திருவிழந்தூர், சேர்ந்தங்குடி, கூறைநாடு, ெரயிலடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பிள்ளையார் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

சீர்காழி

இதேபோல சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள தான்தோன்றிய செல்வ விநாயகர் கோவிலின் முன்பு விநாயகர் சிலை வைத்து சிறப்பு வழிபாடு கள் நடந்தன. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் தென்பாதி மெயின் ரோட்டில் உள்ள உதயபானு பாலச்சந்தர் விநாயகர் கோவில், கணநாதர் விநாயகர் கோவில், அண்டநகர் விநாயகர் கோவில், பிடாரி வடக்கு வீதியில் உள்ள காழி விநாயகர் கோவில், கீழ வீதியில் உள்ள கோமளவல்லி அம்மன் கோவில், ெரயில்வே ரோட்டில் உள்ள விநாயகர் கோவில், மேல மாரியம்மன் கோவில், கடைவீதி விநாயகர் கோவில், புழுகாபேட்டை விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

சிலைகள் கரைப்பு

தொடர்ந்து இரவு தான்தோன்றி செல்வ விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தென்பாதி உப்பனாற்றங்கரையில் கரைக்கப்பட்டன. சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம்

கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்த விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று படைக்கப்பட்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொள்ளிடம் அருகே உள்ள மாங்கனாம்பட்டு விநாயகர் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து ஊர்வலமாக வந்து விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர். கொள்ளிடம் அருகே உள்ள கன்னாங்குளம் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விநாயகருக்கு படையலிட்டு ஊர்வலமாக சென்றனர். கொள்ளிடம் ஒன்றியத்தில் மொத்தம் 38 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது.

திருவெண்காடு

சீர்காழி சட்டநாதர் கோவிலுக்கு உட்பட்ட ஆபத்து காத்த விநாயகர் கோவில் மற்றும் திருவெண்காட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சர்வ சக்தி விநாயகர் கோவிலில் 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதனையடுத்து விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டது. திருவெண்காடு மாணிக்க விநாயகர் கோவில், திருநகரி விநாயகர் கோவில், திருப்பன்கூர் சிவலோக நாதசாமி கோவிலில் உள்ள விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

Next Story