விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் சார்பில் தெருக்களில் 10 அடி உயர விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். இதில் வித, விதமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சிலைகளை 3 -வது நாள் அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடந்தது. மாலையில் உற்சவருக்கு அபிஷேகமும், வீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள விநாயகர் சன்னதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை 11 மணிக்கு சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. இரவு சாமி வீதி உலா நடைபெற்றது.
சந்தன காப்பு அலங்காரம்
கடலூர் மஞ்சக்குப்பம் கிளை சிறைச்சாலை செல்லும் வழியில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு பிறகு சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வேத விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கணபதி ஹோமம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு பிறகு வேதவிநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உலா காட்சி நடந்தது.
சங்காபிஷேகம்
கடலூர் செம்மண்டலம் வில்வராயநத்தம் வலம்புரி நவசக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா, 108 வலம்புரி சங்காபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சங்கு ஸ்தாபனம், கணபதி ஹோமம், மகா பூர்ணாகுதி, 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலா நடந்தது.
இதேபோல் புதுக்குப்பம் சித்தி விநாயகர், திருப்பாதிரிப்புலியூர் ரெயிலடி விநாயகர் கோவில், புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவில், முதுநகர் வெள்ளிப்பிள்ளையார் கோவில், வண்டிப்பாளையம் ரோடு சித்தி விநாயகர் கோவில், மஞ்சக்குப்பம் செல்வ விநாயகர் கோவில் என சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தது.
வீடுகளில் வழிபாடு
வீடுகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடினர். இந்துக்களின் வீடுகளில் மாவிலை தோரணங்கள் கட்டி, கோலம் போட்டு அலங்காரம் செய்து பூஜை அறையில் களி மண்ணால் ஆன விநாயகர் சிலைகளை வைத்து, அணிகலன்கள் மற்றும் எருக்கம்பூ மாலை, அருகம்புல் மாலை அணிவித்து அவல், பொரிகடலை, கொழுக்கட்டை, நாவற்பழம், விளாம்பழம் மற்றும் பழ வகைகள், சுண்டல், பாயாசம் போன்றவற்றை படையல் வைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.