விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்; 212 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு பூஜை


பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் 212 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

பெரம்பலூர்

விநாயகர் சதுர்த்தி

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் அன்றைய நாளில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு, பின்னர் கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி புரட்டாசி மாதம் 1-ந்தேதியான நேற்று வந்தது. அதன்படி விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பெரம்பலூர் நகரில் பிரம்மபுரீஸ்வரர் கோவில், கடைவீதியில் தேரடி, காந்தி சிலை அருகே உள்ள செல்வ விநாயகர் கோவில், எளம்பலூர் சாலையில் மேட்டுத்தெரு, மேரிபுரம் அருள்புரம் அருள்சக்தி விநாயகர் கோவில், துறையூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் பாலமுத்துமாரியம்மன் கோவில், இந்திரா நகர், பெரியார் நகர், வடக்கு மாதவி சாலையில் உள்ள சவுபாக்கிய விநாயகர் கோவில், சங்குப்பேட்டை பகுதி, பெரிய தெற்கு தெரு வெங்கடேசபுரம், துறைமங்கலம், எளம்பலூர் ரோடு, நடேசன் நகர், ஆர்.எம்.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

212 இடங்களில் வைத்து...

பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் மற்றும் பெரம்பலூர் ஆகிய தாலுகாக்களில் போலீசார் அனுமதியுடன் 212 இடங்களில் மயில், அன்னம், சிங்கம், மாடு, மான், தாமரை போன்றவற்றின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது, ஐந்துமுக சிங்க விநாயகர், சிவலிங்கத்தில் விநாயகர், கருட வாகனத்தில் விநாயகர், கிருஷ்ணருடன் விநாயகர், சிவன், பார்வதி, முருகன் குடும்பத்துடன் இருப்பது போன்ற விநாயகர், நந்தி விநாயகர், ரெங்கநாதர் விநாயகர், சித்தி, புத்தியுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு, கொழுக்கட்டை, அவல், பொரி முதல் விநாயகருக்கு பிடித்த பொருட்களை வைத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பக்தர்கள் பலர் தங்களது வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். இந்து முன்னணி சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பெரும்பாலான இடங்களில் இளைஞர்கள் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர். இளைஞர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று சில இடங்களில் சிறுவர்களும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story