விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் 3 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு


விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் 3 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
x

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை 3 டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிக்க உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.

வேலூர்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை 3 டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிக்க உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி விழா

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசார், ஆயுதப்படை போலீசார், அதிவிரைவு படை மற்றும் கமாண்டோ படை போலீசார், ஊர்க்காவல்படையினருக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடந்தது.

இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கலந்து கொண்டு போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் அனைவரும் பணியில் இருக்க வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ள சூழ்நிலை குறித்து அந்தந்த காவல் நிலையத்திற்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரு போலீசுக்கு 2 அல்லது 3 விநாயகர் சிலை பாதுகாப்பு பணி வழங்கப்படலாம். எனவே அடிக்கடி அந்த சிலைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஊர்வலம் நடைபெறும் போது சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டிரோன் மூலம் கண்காணிப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை (இன்று) மற்றும் நாளைமறுநாள் (நாளை) பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட உள்ளது. இந்த விழாவையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 62 பேரிடம் குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என பிரமாண பத்திரம் எழுதி வாங்கப்பட்டு உள்ளது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் பாதையில் 188 கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. மேலும் சில இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. சிலை கரைக்கும் இடத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் ஊர்வலம் கண்காணிக்கப்படும்.

மேலும் 3 டிரோன் கேமராக்கள் மூலம் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதை கண்காணிக்கப்படும். இதுதவிர, மொபைல் கமாண்ட் கன்ட்ரோல் யூனிட் வாகனம் ஒன்றும் கண்காணிப்பு பணியில் புதிதாக ஈடுபடுத்தப்பட உள்ளது. அந்த வாகனத்தில் 360 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கும் கேமராக்கள் உள்ளது. ஊர்வல பாதையில் அந்த வாகனமும் செல்லும். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களை மேப்பிங் சிஸ்டம் மூலமும் கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story