10,008 ருத்ராட்சங்களால் தில்லை நடராஜர் வடிவில் விநாயகர் சிலை
மணல்மேடு அருகே சதுர்த்தி விழாவையொட்டி 10,008 ருத்ராட்சங்களால் தில்லை நடராஜர் வடிவில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி 15 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது
மணல்மேடு:
மணல்மேடு அருகே சதுர்த்தி விழாவையொட்டி 10,008 ருத்ராட்சங்களால் தில்லை நடராஜர் வடிவில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி 15 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சதுர்த்தி விழா
முழு முதற்கடவுளான விநாயக பெருமானின் அவதார தினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். விநாயகர் சதுர்த்தி நாளில் வீடுகளில் பல வண்ணங்களில் விநாயகர் சிலைகளை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்து அருகம்புல், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கடலை, பழங்கள் படைத்து வழிபாடு நடத்தப்படும்.
பின்னர் பூஜை முடிந்ததும் 3,5,7 அல்லது 10-வது நாளில் வீடுகளில் வைத்து இருந்த விநாயகர் சிலைகளை எடுத்து வந்து பொது இடத்தில் வைத்து பூஜை செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
10,008 ருத்ராட்சங்களால் விநாயகர் சிலை
அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு உருவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே ராதாநல்லூரில் 10,008 ருத்ராட்சங்களை கொண்டு தில்லை நடராஜர் வடிவில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக பிரத்தியேகமாக அயோத்தியில் இருந்து மொத்தமாக ஐந்து முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட சிறுதானிய மாவுகளை கொண்டு தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி 10 அடி உயர விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக உருவாக்கப்பட்டு வருகிறது.
பிரசாதமாக வழங்கப்படும்
அதன் மேல் புறத்தில் நூலை கொண்டு ருத்ராட்சங்களை கோர்த்து விநாயகர் சிலை முழுமையாக அலங்கரிக்கப்படுகிறது. இந்து மகாசபையைச் சேர்ந்த தொண்டர்கள் கடந்த 15 நாட்களாக இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இங்கு தயார் செய்யப்படும் விநாயகர் சிலை கும்பகோணத்தில் வைக்கப்படும் என்றும் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் ருத்ராட்சங்கள் பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.