அரசின் விதிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த வேண்டும்


அரசின் விதிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த வேண்டும்
x

திருவாரூர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழிபாதையில் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழிபாதையில் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசும் போது கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி களி மண்ணால் செய்யப்பட்டதும், சுடப்பட்டதும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்ற விநாயகர் சிலைகளையும், கிழங்கு மாவு மற்றும் மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டும் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளையும் நீர் நிலைகளில் பாதுகாப்பானமுறையில் கரைக்க அனுமதிக்கப்படும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது.

முன் அனுமதி பெற வேண்டும்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்காக தயாரிக்கப்படும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள இடத்தின் உரிமையாளரின் எழுத்துமூலமான அனுமதி கடிதத்தினை பெற்று, அத்துடன் மேற்படி ஊர்வலம் நடத்துவதற்கான முன் அனுமதி கோரும் விண்ணப்பத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்பாளர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

விநாயகர் ஊர்வலத்தின் போது எடுத்து செல்ல உள்ள சிலைகளின் உயரம் மற்றும் பீடத்தின் அமைப்பு போன்ற விவரங்களை போலீஸ்துறை அதிகாரிகளிடம் அமைப்பாளர்களால் உரிய காலத்திற்கு முன்பாக தெரிவிக்க வேண்டும். ஊர்வலத்தின் போது மின்சாரம் செல்லும் மின் கம்பிகளை குறுக்கிடாத அளவிற்கு விநாயகர் சிலைகளை வடிவமைத்து கொள்ள வேண்டும்.

அரசின் விதிமுறைகள்

கோர்ட்டு ஆணை மற்றும் தமிழக அரசின் விதிமுறைகளின்படி அனுமதிக்கப்பட்ட வழிபாதையில் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த வேண்டும். போலீஸ் துறையால் அனுமதி வழங்கப்பட்ட நேரத்திற்குள் விநாயகர் ஊர்வலத்தை முடித்திட வேண்டும். விநாயகர் ஊர்வலமானது மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் செல்ல வேண்டும்.

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்வதற்காக பயன்படுத்த உள்ள வாகனங்களை ஊர்வலம் நடத்துவதற்கு முதல் நாளே வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் காண்பித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் விநாயகர் ஊர்வலம் நடத்துபவர்கள் அரசு விதிமுறைகள் மற்றும் ஐகோர்ட்டு ஆணை ஆகியவற்றினை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளதுரை, உதவி கலெக்டர் கீர்த்தனாமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story