விற்பனை மந்தம் காரணமாக விநாயகர் சிலை தயாரிக்கும் பணி குறைந்தது-மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை


விற்பனை மந்தம் காரணமாக விநாயகர் சிலை தயாரிக்கும் பணி குறைந்தது-மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை
x
தினத்தந்தி 13 Sept 2023 12:30 AM IST (Updated: 13 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

விற்பனை மந்தம் காரணமாக விநாயாகர் சிலை தயாரிப்பு குறைந்ததால் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்


பொள்ளாச்சி


விற்பனை மந்தம் காரணமாக விநாயாகர் சிலை தயாரிப்பு குறைந்ததால் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.


விநாயகர் சதுர்த்தி


ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் வீடுகள், வீதிகள் மற்றும் ரோட்டோரங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக மண்பாண்ட தொழிலாளர்கள் 2 மாதத்திற்கு முன்பே விநாயகர் சிலையை தயாரிக்கும் பணியை தொடங்கி விடுவார்கள். இதற்கிடையில் காகிதகூழ் மூலம் பல்வேறு உருவங்கள் கொண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.


இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக பொள்ளாச்சி பகுதியில் ஆவல்சின்னாம்பாளையம், வடுகபாளையம், ஆர்.பொன்னாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. போதுமான மண் கிடைக்காதது, விற்பனை மந்தம் காரணமாக விநாயகர் சிலை தயாரிப்பு குறைந்து விட்டது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-


மண் எடுக்க அனுமதி


விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. ரூ.150 முதல் ரூ.2,000 ஆயிரம் வரை சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் பொள்ளாச்சி பகுதியில் 1,000விநாயகர் சிலைகள் வரை தயாரிக்கப்படும். கடந்த ஆண்டு கூடுதலாக சிலைகள் தயாரித்தும் விற்பனை இல்லை. இதன் காரணமாக இந்த ஆண்டு 80 சதவீதம் சிலை தயாரிப்பு குறைந்து உள்ளது. மேலும் வீட்டில் வைத்து வழிபடும் வகையில் தான் சிலைகள் தயாரிக்கிறோம். இதற்கு முன் விநாயகர் சதுர்த்தி என்றால் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைக்கு தான் அதிகமாக வரவேற்பு இருக்கும்.


ஆனால் தற்போது காகித கூழ் கொண்டு வித, விதமான உருவங்களில் பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை தான் குழந்தைகளும் விரும்புகின்றனர். இதனால் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளின் விற்பனை குறைந்து வருகிறது. கடந்த ஓராண்டுக்கு முன் கோதவாடி குளத்தில் மண் எடுக்க அனுமதி கிடைத்தது. தற்போது மண் எடுக்க அனுமதி இல்லாததாலும் விநாயகர் சிலைகளை அதிகமாக தயாரிக்க முடியவில்லை. கார்த்திகை தீபத்திற்கு முன்பாக மண் எடுக்க அனுமதி கிடைத்தால் தான் விளக்கு தயாரிக்க முடியும். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


1 More update

Next Story