ஆந்திராவில் இருந்து விதிமுறைகளை மீறி லாரியில் கொண்டு வந்த விநாயகர் சிலைகள்போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
ஆந்திராவில் இருந்து விதிமுறைகளை மீறி தேன்கனிக்கோட்டைக்கு லாரியில் கொண்டு வந்த விநாயகர் சிலைகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேன்கனிக்கோட்டை
ஆந்திராவில் இருந்து விதிமுறைகளை மீறி தேன்கனிக்கோட்டைக்கு லாரியில் கொண்டு வந்த விநாயகர் சிலைகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா
ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலைகளை பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் வாங்கி வருகின்றனர். சதுர்த்தி விழாவை முன்னிட்டு 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை கோட்டைவாசல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள மதனப்பள்ளி பகுதியில் இருந்து 12 மற்றும் 13 அடி உயரமுள்ள 2 விநாயகர் சிலைகளை வாங்கி லாரியில் ஏற்றி தேன்கனிக்கோட்டைக்கு கொண்டு வந்தனர். இந்த லாரியை தேன்கனிக்கோட்டையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த விநாயகர் சிலைகள் பெரிய அளவில் உள்ளது. அரசு விதிமுறைகளை மீறி இருப்பதாக கூறி போலீசார் லாரியில் ஏற்றி வந்த 2 சிலைகளையும் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
போலீசாரிடம் வாக்குவாதம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொதுமக்கள், போலீசார் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 10 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை கொண்டு வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் மின் இணைப்புகள் துண்டிக்கப்படுகிறது. சிலைகளை 10 அடி உயரத்திற்கு குறைத்து வழி பட வேண்டும். 2 சிலைகளின் உயரத்தையும் குறைத்து வழிபாட்டுக்கு வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதற்கு பொதுமக்கள் ஒப்பு கொண்டனர். இதையடுத்து போலீசார் 2 விநாயகர் சிலைகளையும் பொதுமக்களிடம் ஒப்படைத்தனர். லாரியில் எடுத்து வந்த விநாயகர் சிலைகளை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றதால் தேன்கனிக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.