விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு


விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு
x

மயிலாடுதுறையில், 45 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

மயிலாடுதுறை

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததால் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.இதனையொட்டி மயிலாடுதுறை நகரம், மல்லியம், மாப்படுகை, மூவலூர், திருவிழந்தூர், மணக்குடி, நாஞ்சில் நாடு, நல்லத்துக்குடி, காமராஜர் சாலை உள்பட நகரில் 45 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. இதேபோல, வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.

காவிரி ஆற்றில் கரைப்பு

இதனையடுத்து நேற்றுமுன்தினம் மாலை மேற்கண்ட பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் சரக்கு வாகனம் மற்றும் டிராக்டர்களில் ஏற்றி கூறைநாடு பிள்ளையார் கோவில் அருகில் கொண்டு வந்து ஒருங்கிணைக்கப்பட்டது. பின்னர் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், பொதுச் செயலாளர் சாமிநாதன், பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் நாஞ்சில் பாலு, நகர தலைவர் வினோத் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் விநாயகர் சிலைகள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டன.

மேளதாளங்களுடன் புறப்பட்ட விநாயகர் ஊர்வலம் காந்திஜி ரோடு, பட்டமங்கலத் தெரு, கால்டெக்ஸ், இரட்டை தெரு வழியாக மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றை சென்றடைந்தது. அங்கு 45 விநாயகர் சிலைகள் ஒவ்வொன்றாக காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story