விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைப்பு
ராமேசுவரம், பாம்பனில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட்டன.
ராமேசுவரம்,
ராமேசுவரம், பாம்பனில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள்
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதுபோல் இந்து முன்னணி சார்பிலும் ராமேசுவரம், ராமநாதபுரம், மண்டபம், பாம்பன் உச்சிப்புளி என மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்டன. பல இடங்களில் ராமேசுவரத்தில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று தேவர் சிலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமானது தொடங்கியது. பின்னர் விநாயகர் சிலைகள் பள்ளிவாசல் தெரு, ராமதீர்த்தம், நகர் காவல் நிலைய சாலை, திட்டக்குடி சந்திப்பு சாலை வழியாக கோவில் ரதவீதி வழியாக சுற்றி வந்து அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டன.
கடலில் கரைப்பு
தொடர்ந்து ஒவ்வொரு விநாயகர் சிலைகளாக அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தில் இந்து முன்னணி ராமமூர்த்தி, பா.ஜனதா கட்சியின் நகர தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் முருகன், கணேசன், செல்வம், சுரேஷ், சுந்தரம், கணேசன், பாலு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதியில் உள்ள கடலில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.