தூத்துக்குடியில் விறுவிறுப்பாக தயாராகும் விநாயகர் சிலைகள்


தூத்துக்குடியில் விறுவிறுப்பாக தயாராகும் விநாயகர் சிலைகள்
x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் விநாயகர் சிலைகள் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது

தூத்துக்குடி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் விநாயகர் சிலைகள் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

விநாயகர் சதுர்த்தி

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

இதேபோல் மக்களும் தங்கள் வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். குறிப்பிட்ட நாட்கள் வழிபாட்டுக்கு பிறகு இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

தயாராகும் சிலைகள்

இதேபோல் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சதுர்த்தி கொண்டாட்டத்துக்காக விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி அளிக்கப்படவில்லை. வீடுகளில் மட்டும் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

தொழிலாளர்கள் தீவிரம்

விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகமாக கொண்டாட இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன. விழாவுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலைஞர்கள் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் தயாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள முத்தையாபுரம் பகுதியில் வடமாநில கலைஞர்கள் தங்கியிருந்து சிலைகளை தயாரித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக நடந்த சிலை தயாரிப்பு பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சிலைகளுக்கு இறுதி வண்ணம் பூசும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இங்கு அரை அடி முதல் 7 அடி வரை உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை பல்வேறு வண்ணங்களில் தயாரித்து உள்ளனர். இந்த விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராகி வருகின்றன.

இதுகுறித்து வடமாநில கலைஞர்கள் கூறும்போது, இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தி விழா வழக்கம்போல் நடைபெறுவதால் மக்கள் ஆர்வமுடன் வாங்குவார்கள் என சிலைகளை அதிகளவில் தயார் செய்து உள்ளோம். ஏற்கனவே சிலர் ஆர்டர் கொடுத்துள்ளனர். வரும் நாட்களில் பலர் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்வார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம். விநாயகர் சிலைகளில் உயரம், வடிவம் போன்றவற்றை பொறுத்து விலை நிர்ணயித்துள்ளோம், என்றனர்.


Next Story