விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு


விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
x

புதுக்கோட்டையில் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. நீர்நிலைகளில் சிலைகள் கரைக்கப்பட்டன.

புதுக்கோட்டை

விநாயகர் சதுர்த்தி

புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 18-ந் தேதி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் இந்து முன்னணி, பா.ஜ.க.வினர், இந்து அமைப்பினர், பொதுமக்கள் தரப்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. இதில் மொத்தம் 704 இடங்களில் சிலைகள் வைத்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்படடு நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் பல இடங்களில் கரைக்கப்பட்டன.

புதுக்குளத்தில் கரைப்பு

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை நகரப்பகுதியில் இந்து முன்னணி, பா.ஜ.க.சார்பில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நகரப்பகுதியில் ஆங்காங்கே வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக திலகர் திடலுக்கு சரக்கு வேன்கள், டிராக்டரில் மேள, தாளம் முழங்க எடுத்து வரப்பட்டன. அதன்பின் அங்கிருந்து மொத்தமாக ஊர்வலமாக சந்தைபேட்டை, புதிய பஸ் நிலையம் வழியாக, பழைய அரசு மருத்துவமனை, மேல ராஜ வீதி, வடக்கு ராஜவீதி, கீழ ராஜ வீதி வழியாக புதுக்குளத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இந்த ஊர்வலத்தின் போது இளைஞர்கள் மேள, தாளத்திற்கு நடனமாடியபடி உற்சாகமாக வந்தனர். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு புதுக்குளத்தில் நீரில் கரைக்கப்பட்டன. இதேபோல மாவட்டத்தில் ஆங்காங்கே நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

மரத்தில் மோதி சிலை உடைந்தது

இதற்கிடையில் புதுக்குளத்தில் கரை வழியாக சிலையை கொண்டு சென்ற போது மரத்தில் சிலை மோதியது. இதில் ஒரு சிலையில் கழுத்து, கைப்பகுதி உடைந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்து முன்னணியினர் மற்றும் ஊர்வலத்தில் வந்தவர்கள் ஆவேசமடைந்தனர். சிலையை கரைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் உடனடியாக விரைந்து வந்து சிலைகள் செல்வதற்கு வசதியாக மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். அதன்பின் சிலைகள் நீரில் கரைக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் புதுக்குளத்தில் நேற்று இரவில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவரங்குளம், ஆவூர்

திருவரங்குளத்தில் கடைவீதியில் வைக்கப்பட்டு வழிபட்ட விநாயகர் சிலையை வாகனத்தில் ஊர்வலமாக சென்று ெதப்பக்குளத்தில் கரைத்தனர். இதேபோல் நிப்பனேஸ்வரம் கிராமம், தோப்புக்கொல்லை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கரைத்தனர்.

விராலிமலை கிழக்கு ஒன்றியம் மாத்தூர், குமாரமங்கலம், மதயானைப்பட்டி, வில்லாரோடை, சூரியூர், மலம்பட்டி, மண்டையூர், நீர்பழனி, ஆலங்குடி உள்ளிட்ட 20 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக பூஜைகள் நடைபெற்றது. பின்னர் நேற்று மாலை 5 மணியளவில் மாத்தூர் அண்ணா நகர், சொக்கலிங்கபுரம், இறைவன் நகர் ஆகிய 3 இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் மாத்தூரில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு குண்டூர், விமானநிலையம், பெரிய கடைவீதி வழியாக சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

இதேபோல குன்னத்தூர், சூரியூர், மண்டையூர் உள்ளிட்ட 17 இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது.

ஆலங்குடி, கறம்பக்குடி

ஆலங்குடியில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று ஆலங்குடியில் 22 விநாயகர் சிலைகளை மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது.

கறம்பக்குடியில் 9 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அதன் ஊர்வலம் நடைபெற்றது. கறம்பக்குடி நரிக்குறவர் காலனியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. இதையடுத்து விநாயகர் சிலையை அவர்கள் ஊர்வலமாக கொண்டு சென்று திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் கரைத்தனர்.

பொன்னமராவதி, விராலிமலை

பொன்னமராவதி பகுதியில் 18 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. இதையடுத்து அந்த விநாயகர் சிலைகள் அனைத்து வாகனங்களில் வைத்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று அமரகண்டான் ஊரணியில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

விராலிமலை வடக்கு தெரு, அன்பு நகர், தேரடி தெரு உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை நடைபெற்றது. பின்னர் விநாயகர் சிலைகளை ஆட்டோவில் ஏற்றி விராலிமலை கடைவீதி வழியாக மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்று கீரனூர் செல்லும் சாலையில் உள்ள அம்மன்குளத்தில் கரைத்தனர்.

கீரனூர், அரிமளம்

கீரனூர் பகுதியில் கள்ளர் தெரு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு சென்று குளத்தில் கரைக்கப்பட்டது.

அரிமளம், கே.புதுப்பட்டி, காவல் சரகத்திற்கு உட்பட்ட 19 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். நேற்று இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் மேளதாளம் முழங்க விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கிராமங்களில் ஆங்காங்கே உள்ள குளங்களில் கரைத்தனர்.

அறந்தாங்கியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 12 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன


Next Story