அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பறிமுதல்
சதுர்த்தியையொட்டி பெரம்பலூர் அருகே வி.களத்தூர்-கை.களத்தூரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுமதி மறுப்பு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூரில் இந்து சமுதாய மக்களுக்கும், இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் திருவிழா நடத்துவதில் அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருதரப்பினர்களும் திருவிழாவை நடத்தி வந்தனர். இதனால் வி.களத்தூரில் விநாயகர் சதுர்த்தியின் போது சிலை வைத்து வழிபட மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இஸ்லாமியர்கள் நடத்திய சந்தனக்கூடு விழாவில் இந்து சமுதாய மக்கள் கலந்து கொண்டனர். அதேபோல் இந்து சமுதாய மக்கள் நடத்திய திருவிழாவில் இஸ்லாமியர்கள், ஜமாத்தார்கள் கலந்துகொண்டு சமரசம் மேற்கொண்டனர். இதனால் நீண்ட காலமாக இரு சமுதாயத்திற்கு இடையே இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
18 பேர் கைது
இந்தநிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இந்து முன்னணியினர் முடிவு செய்து சிலை வைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதனைத் தொடர்ந்து அனுமதி இன்றி 5 அடி மற்றும் 3 அடி உயர விநாயகர் சிலைகளை வைத்து அப்பகுதி மக்கள் சாமி கும்பிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு விநாயகர் சிலைகளை அகற்ற முயற்சி செய்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து போலீசார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். பின்னர் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த 18 பேரை கைது செய்து அழைத்து சென்றனர். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த 2 விநாயகர் சிலைகளையும் அகற்றினர். பின்னர் நேற்று காலை கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
நேற்று காலை 10 மணியளவில் பா.ஜனதா மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் கட்சியினர், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் வி.களத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் எடுத்து சென்ற சிலைகளை கொண்டு வந்து வைக்க வேண்டும் என கூறி முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
இதனைதொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களுடன் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி எறையூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தனர். இந்த சம்பவத்தால் வி.களத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாதுகாப்புக்காக ஆயுதப்படை போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதேபோல் கை.களத்தூரில் விநாயகர் சிலை வைத்து வழிபட ஒரு தரப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர். ஆனால் சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அனுமதி இன்றி விநாயகர் சிலையை வைத்து சாமி கும்பிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அனுமதி இன்றி வைக்கப்பட்ட 7 அடி விநாயகர் சிலையை எடுத்து சென்றனர். இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று பெரம்பலூர்- சின்னசேலம் சாலையில் கை.களத்தூரில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் போலீசார் எடுத்து சென்ற சிலையை கொண்டு மீண்டும் அப்பகுதியில் வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மறியலை கைவிடவில்லை. இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 52 பேரை போலீசார் கைது செய்து நெற்குணத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தினால் பெரம்பலூர்-சின்னசேலம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.