விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திருமருகல் ஒன்றியத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழா
திருமருகலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பூ, பழம், தேங்காய் போன்ற பொருட்களை ஆர்வத்துடன் பொதுமக்கள் கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக வந்து வாங்கிச் சென்றனர்.
விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களிலும், சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி நடைபெறுவதற்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
40 சிலைகள் பிரதிஷ்டை
திருமருகல் ஒன்றிய பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 40 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதில் 30 சிலைகள் திருப்புகலூர், அண்ணா மண்டபம், திருமருகல் வழியாக நடுக்கடையில் ஒன்றிணைத்து அங்கிருந்து திட்டச்சேரி வழியாக விநாயகர் சிலைகள் இரவு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நாகூர் வெட்டாற்றில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை கரைக்கப்பட உள்ளது. முன்னதாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள அந்தந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் அனைத்திற்கும் மேளத்தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஊர்வலம்
இந்த ஊர்வலத்தை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் விவேக் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்து முன்னணி மாவட்ட தலைவர் கணேஷ், இந்து முன்னணி விநாயகர் குழு ஒருங்கிணைப்பாளர் கொந்தை பாலு ஆகியோர் முன்னிலை வைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
வேதாரண்யம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இந்த விநாயகர் சிலைகளுக்கு உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.நேற்று காலை புஷ்பவனத்தில் விநாயகர் கோவில் முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட 15 அடி விநாயகர் சிலைக்கு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. விநாயகர் சிலை புஷ்பவனத்தில் இருந்து செம்போடை, நாலுவேதபதி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக 30 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று புஷ்பவனம் கடலில் கரைக்கப்பட்டது. இதேபோல் செம்போடையில் 12 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. 20 கிலோ மீட்டர் ஊர்வலமாக சென்று விநாயகர் சிலை கடலில் கரைக்கப்பட்டது.