விநாயகர் சிலைகள் ஊர்வலம்
உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது.
தியாகதுருகம்,
நாடு முழுவதும் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி தியாகதுருகத்தில் கடைவீதி, கஸ்தூரிபாய் நகர், சந்தை மேடு, உதயமாம்பட்டு சாலை உள்ளிட்ட 19 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்காக வாகனங்களில் தியாகதுருகம் மாரியம்மன் கோவில் அருகே கொண்டுவரப்பட்டது.
பின்னா் இங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு கடைவீதி வழியாக பிரிதிவிமங்கலம் ஏரியை சென்றடைந்தது. பின்னர் அங்கு விநாயகர் சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக கரைக்கப்பட்டது. இதேபோல் தியாகதுருகம் பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கோமுகி, மணிமுக்தா ஆறுகள் மற்றும் ஏரிகளில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தின்போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலகாசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை
அதேபோல் உளுந்தூர்பேட்டை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாட்டு குழுவினர் பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.
பின்னர் நேற்று முன்தினம் அந்த சிலைகள் அனைத்தும் இந்து முன்னணியினர் தலைமையில் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.