கோவையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்


கோவையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 21 Sept 2023 12:15 AM IST (Updated: 21 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன்

விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரத்சேனா உள்பட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன்படி மாநகரில் 676 சிலைகளும், புறநகர் பகுதியில் 1,611 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இந்த சிலைகள் நேற்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) குளங்களில் கரைக்கப்படும் என அறிவிக்கப்பட்டன. அதன்படி நேற்று கோவையில் உள்ள குறிச்சி குளம், குனியமுத்தூர், சிங்காநல்லூர் மற்றும் வெள்ளலூரில் உள்ள குளங்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

ஊர்வலமாக கொண்டு சென்றனர்

அதன்படி மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அந்த சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டன. சிலை பொறுப்பாளர்கள் மற்றும் சிலர் அந்த வாகனங்களில் அமர்ந்து இருந்தனர்.

பின்னர் அந்த வாகனங்களில் ஏற்றப்பட்ட விநாயகர் சிலைகளை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குளத்துக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். அந்த குளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரிடம் அந்த சிலைகள் ஒப்படைக்கப்பட்டன.

குளங்களில் கரைப்பு

பின்னர் நீச்சல் தெரிந்த பொறுப்பாளர்கள் மட்டும் குளத்தில் இறங்கி அந்த சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்டது. அவர்கள் குளத்துக்குள் இறங்கி போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் உதவியுடன் சிலைகளை கரைத்தனர்.

சிலைகளை கரைப்பதை பார்ப்பதற்காக, குறிச்சி, குனியமுத்தூர், சிங்காநல்லூர், வெள்ளக்கிணறு ஆகிய குளங்களில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் குளத்துக்குள் சென்றுவிடாமல் இருக்க போதிய பாதுகாப்பு வசதிகளை போலீசார் செய்து இருந்தனர்.

2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

அவர்கள் தடுப்புகளின் வெளியே நின்று குளங்களில் சிலைகளை கரைப்பதை பார்த்தனர். முன்னதாக விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், துணை கமிஷனர்கள் சந்தீஷ், சண்முகம், ராஜராஜன் ஆகியோர் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுதவிர சென்னையை சேர்ந்த சிறப்பு படை போலீசாரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். அதுபோன்று ஊர்வலம் சென்ற வழியில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டு இருந்தன. இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பலர் ஊர்வலமாக சென்ற வாகனங்களின் முன்பு நடனமாடியபடி சென்றனர்.

கண்காணிப்பு கேமராக்கள்

ஊர்வலத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஊர்வலம் செல்லும் வழியில் 1000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் செல்வதை கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் கோவை மாநகர பகுதியில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டு உள்ள 294 சிலைகளும், பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டு உள்ள 27 சிலைகளும் முத்தண்ணன்குளம், வெள்ளலூர் குளத்தில் கரைக்கப்படுகிறது. எனவே இந்த குளங்களில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

அன்னூர்

அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் 45 சிலைகள் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டு கடந்த இரு நாட்களாக பூஜை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த சிலைகள் நேற்று அன்னூர் ஓதிமலை சாலையில் உள்ள பாத விநாயகர் கோவில் முன் வாகனங்களில் எடுத்து வரப்பட்டன. அதன்பின் சிலைகளை கோயில் முன் இருந்து தர்மர் கோயில் வீதி , கூத்தாண்டவர் கோவில் வீதி, சக்தி சாலை, மேட்டுப்பாளையம் மற்றும் கோவை சாலை வழியாக சிறுமுகைக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று எலகம் பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றங்கரையில் சிலைகள் கரைக்கப்பட்டன. முன்னதாக விநாயகர் சிலைகள் அணிவகுத்து சென்ற பேரணியை இந்து முன்னணி நிர்வாகிகள் சதீஷ், கார்த்திக், பிரதீப், மற்றும் அ.தி.மு.க.அன்னூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சாய்செந்தில் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடப்பட்டது. 3-வது நாளான நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைக்கு பின்னர் தாரை தப்பட்டை முழங்க மேட்டுப்பாளையம்-காரமடை சாலை சி.டி.பணிமனை அருகே கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்திற்கு கோவை கோட்ட செயலாளர் பி. ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் வரவேற்றுப் பேசினார். எம்.எஸ்.ஆர். செல்வம், ஜி.வி. மாதையன் ஆகியோர் கொடியசைத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

ஊர்வலம் காரமடை சாலை வழியாக சென்று பொதுக்கூட்டம் நடைபெறும் கூட்டுறவு காலனி வீர கார்த்திகேயன் திடலை அடைந்தது. அங்கு நடந்த பொதுகூட்டத்தில் பா.ஜனதா கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேசினார். பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன.

ஊர்வலத்தையொட்டி மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் மேற்பார்வையில் கோவை மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் தலைமையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story