பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்


பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

குடியாத்தத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. பின்னர் சிலைகள் நெல்லூர்பேட்டை ஏரியில் கரைக்கப்பட்டன.

வேலூர்

குடியாத்தத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. பின்னர் சிலைகள் நெல்லூர்பேட்டை ஏரியில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

குடியாத்தத்தில் கடந்த 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. பல இடங்களில் பாரதீய ஜனதா கட்சியினர், இந்து முன்னணியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் ஏராளமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. சில இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மறுநாளே கரைக்கப்பட்டது.

பெரும்பாலான விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. குடியாத்தம் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நேற்று மாலை குடியாத்தம் படவேட்டு எல்லையம்மன் கோவில் அருகில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் கோபி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் பரமேஸ்வரன் கலந்து கொண்டார்.

நெல்லூர்பேட்டை ஏரியில் கரைக்கப்பட்டன

நகரின் முக்கிய வீதிகளான .காங்கிரஸ் ஹவுஸ் ரோடு, அண்ணாசாலை, பழைய பஸ்நிலையம், காமராஜர் பாலம், தாழையாத்தம் பஜார், சந்தப்பேட்டை பஜார், நேதாஜி சவுக், பேரணாம்பட்டு ரோடு, காந்தி சவுக்கு வழியாக மேள தாளங்களுடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் நெல்லூர்பேட்டை ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமையில் தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் ஊர்வலத்துடன் சென்றனர்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நேற்று காலை முதல் குடியாத்தத்தில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நகரில் உள்ள பல்வேறு விநாயகர் சிலைக்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நகரின் முக்கிய இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

முன்னதாக நெல்லூர்பேட்டை பெரிய ஏரியில் விநாயகர் சிலை கரைக்கும் இடத்தை குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் பார்வையிட்டு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story