பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திருப்பத்தூர் மற்றும் ஆம்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது முஸ்லிம்கள் ஜூஸ் வழங்கினர்.
விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 15-ந் தேதி இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள், இளைஞர்கள் சார்பில் 686 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலம் நேற்று திலகர் இந்து இளைஞர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாணியம்பாடி மெயின் ரோடு பிள்ளையார் கோவில் அருகில் விநாயகர் ஊர்வலம் தொடங்கியது. பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் வி.அன்பழகன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பா.ஜ.க. நகர துணை தலைவர் ஆர்.ரவி, வர்த்தக அணி நகர தலைவர் பூபதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜூஸ் வழங்கிய முஸ்லிம்கள்
வீட்டில் வைத்து பூஜை செய்த சிறிய விநாயகர் சிலைகளை பெண்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலத்திற்கு முன் சென்றனர். ஊர்வலம் தாரை தப்பட்டை, பம்பை, இளைஞர்களின் வீர சாகசங்களுடன் வாணியம்பாடி மெயின் ரோடு, பொன்னியம்மன் கோவில் தெரு, தண்டபாணி கோவில் தெரு, கோட்டை தெரு, சிவன் கோவில், நகைக்கடை தெரு, ஆலங்காயம் ரோடு, கிருஷ்ணகிரி மெயின் ரோடு வழியாக ஆதியூர் பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கு சென்றது.
மதியம் அனைத்து விநாயகர் சிலைகளும் சிவன் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் ஊர்வலம் புறப்பட்டது. அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வசித்து வருகிறார்கள். அந்தப்பகுதியில் ஊர்வலம் வந்தபோது ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் முஸ்லிம் மக்கள் ஜூஸ் வழங்கினார்கள். சிறிய விநாயகர் சிலைகளை தூக்கி வந்த பெண்கள் மேளதாளத்திற்கு ஏற்ப நடனமாடி சென்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், ஆயுதப்படை போலீசார் மற்றும் கமாண்டோ படை, துப்பாக்கி ஏந்திய போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார் என 1,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வழிநெடுகிலும் டிரோன், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் ஊர்வலத்தை கண்காணித்தனர்.
ஊர்வலத்தையொட்டி டவுன் போலீஸ் நிலைய கூட்ரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி மெயின் ரோடு வழியாக செல்லும் பாதையை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டது.
ஆம்பூர்
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆம்பூர் கிருஷ்ணாபுரம், கஸ்பா, பைபாஸ் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. சிலைகளை கரைப்பதற்காக நேற்று ஊராளமாக எடுத்து செல்வதற்காக பஜார் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து முக்கிய சாலைகள் வீதியாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏரியில் கரைக்கப்பட்டது.