போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்


போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

வாணியம்பாடி, நாட்டறம்பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

திருப்பத்தூர்

சிலை ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி வாணியம்பாடியில் இந்து முன்னணி சார்பில் அம்பூர்பேட்டை பொன்னியம்மன் கோவில் உள்பட 17 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று சிலைகளை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து செல்வதற்காக அம்பூர்பேட்டை பொன்னியம்மன் கோவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

மதியம் 2 மணி அளவில் பொன்னியம்மன் கோவிலில் இருந்து அனைத்து சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து, ஊர்வலத்தை வாணியம்பாடி தொகுதி செந்தில்குமார் எம்.எல்.ஏ., நகர தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சாரதி குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஏரியில் கரைப்பு

ஊர்வலத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் விட்டல், கிரி, அரவிந்த், பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் பொன்னியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு திருவள்ளுவர் வீதி, ஆசிரியர் நகர், காதர்பேட்டை, பஸ்நிலையம், சி.எல்.சாலை, முஹம்மத் அலி பஜார், பூக்கடை பஜார், அரசமர வீதி, கச்சேரிரோடு ஆகிய முக்கிய வீதிகளின் வழியாக சென்று பள்ளிப்பட்டு ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

இதேபோல் வாணியம்பாடி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 41 விநாயகர் சிலைகள் பல்வேறு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது.

நாட்டறம்பள்ளி

நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் 29 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று இந்து முன்னணி சார்பில் 4 விநாயகர் சிலைகள் நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று நாட்டறம்பள்ளி அருகே உள்ள பந்தாரப்பள்ளி கல்லுக்குட்டை ஏரி பகுதியில் 3 விநாயகர் சிலைகளை கிரேன் மூலம் இறக்கி கரைத்தனர். ஒரு சிலை கிருஷ்ணகிரி அணையில் நேற்று மாலை கரைக்கப்பட்டது.

ஜோலார்பேட்டை நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் 45 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் 30 சிலைளை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று அதேப்பகுதியில் உள்ள ஏரியில் கரைத்தனர். ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) முத்தையன் தலைமையில் வருவாய்துறையினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் என 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story