விநாயகர் சிலைகள் கரைக்க அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் திருட்டு
குடியாத்தத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள எல்.இ.டி. மின் விளக்குகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
விநாயகர் சிலைகள் கரைப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை நெல்லூர்பேட்டை ஏரியில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் விஜயகுமார், குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன், பொறியாளர் சம்பத் உள்ளிட்ட அதிகாரிகள் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
எல்.இ.டி. விளக்குகள் திருட்டு
தொடர்ந்து அப்பகுதியில் ஏரியில் பொதுமக்கள் பாதுகாப்பாக விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு வசதியாக சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் 35 எல்.இ.டி. மின்விளக்குகள் பொருத்தப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலையில் மீண்டும் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதிக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சென்று பார்த்தபோது ரூ.1 லட்சம் மதிப்பிலான 15 எல்.இ.டி. மின்விளக்குகள் திருடப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மின்விளக்குகள் திருடப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன், நகர மன்ற உறுப்பினர் ஜி.எஸ்.அரசு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக மீண்டும் அங்கு எல்.இ.டி. மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுத்தனர்.
விநாயகர் சிலைகளை கரைக்க அமைக்கப்பட்டு இருந்த எல்.இ.டி. மின்விளக்குகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.