விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பவானி ஆற்றில் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு


விநாயகர் சிலைகள் கரைக்கப்படும்  பவானி ஆற்றில் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு
x

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பவானி ஆற்றில் டி.ஐ.ஜி. முத்து சாமி நேரில் ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பவானி ஆற்றில் டி.ஐ.ஜி. முத்து சாமி நேரில் ஆய்வு செய்தார்.

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 34-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என்றும், அதைத்தொடர்ந்து 2-ம் நாள் கோ பூஜை, விளக்கு பூஜை அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது என்றும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாபெரும் விசர்ஜன ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் என முடிவு செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் 70 விநாயகர் சிலைகளும், காரமடையில் 202 சிலைகள், சிறுமுகையில் 36 சிலைகள், மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்து 400-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணியின் கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், முருகநாதன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

கூட்டத்தில் கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் பேசுகையில், மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது. இந்து முன்னணி சார்பில் 71 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகவும், அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்திற்கு பின்னர் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை கரைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து சிலைகளை கரைக்க உள்ள பகுதியான சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள பவானி ஆற்றங்கரையோரம் மின்விளக்குகள் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை வைத்தார்.

ஆய்வு

இதனைத்தொடர்ந்து டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையிலான போலீசார் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்கள், ஊர்வலம் செல்லும் பாதை, கரைக்கப்படும் இடமான சுப்பிரமணியசுவாமி கோவில் பவானி ஆற்றங்கரையோரம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.


Next Story