விநாயகர் சிலை ஊர்வலம்


விநாயகர் சிலை ஊர்வலம்
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டது. இதையொட்டி பொள்ளாச்சியில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டது. இதையொட்டி பொள்ளாச்சியில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விநாயகர் சிலை ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி கடந்த 31-ந் தேதி கொண்டாடப்பட்டது இதையொட்டி இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் விசர்ஜன ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட தலைவர் ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதை தொடர்ந்து மேள, தாளத்துடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வாகனங்கள் எடுத்து செல்லப்பட்டன. இதையொட்டி கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், துணை சூப்பிரண்டுகள் தீபசுஜிதா, செல்வராஜ் மற்றும் போலீசார், துப்பாக்கிய ஏந்திய அதிவிரைவு படையினர், ஊர்க்காவல்படையினர் உள்பட 800 போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வஜ்ரா வாகனங்கள்

கலவரங்களை கட்டுப்படுத்தும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன. ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அம்பராம்பாளையம் ஆழியாற்றில் 60 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக பொள்ளாச்சி நகரில் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

நெகமம்

இதேபோல நெகமம், பனப்பட்டி, வடசித்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 26 சிலைகள் நேற்று பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆற்றிற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.

முன்னதாக இந்து முன்னணி சார்பில் நெகமம் நாகர் மைதானத்தில் கூட்டம் நடைபெற்றது. சிலை கரைப்பையொட்டி நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணப்பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் முகமது, மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story