விநாயகர் சிலைகள் ஒன்றியம், நகரம் வாரியாக கரைக்க ஏற்பாடு


விநாயகர் சிலைகள் ஒன்றியம், நகரம் வாரியாக கரைக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 18 Sept 2023 12:15 AM IST (Updated: 18 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

இந்து முன்னணி சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஒன்றியம், நகரம் வாரியாக கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

இந்து முன்னணி சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஒன்றியம், நகரம் வாரியாக கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5004 சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு குமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் 5004 விநாயகர் சிலைகளை இந்து கிராம கோவில்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் இன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந் தேதி (சனிக்கிழமை) மற்றும் 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை பூஜைக்கு வைக்கப்படுகின்றன.

விநாயகர் அகவல் பாராயணம், பஜனை, சமய மாநாடு என பல இறைநிகழ்ச்சிகளுடன் பூஜையில் வைத்து பின்னர் கடலிலும், ஆறுகளிலும், நீர்நிலைகள் மற்றும் அருவிகளிலும் வழக்கம்போல் 11 ஊர்வலங்களாக சென்று கரைக்கப்பட உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

மணவாளக்குறிச்சி-

அகஸ்தீஸ்வரம்

வருகிற 23-ந் தேதி மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவில் முன்பிருந்து ஊர்வலம் தொடங்கி மாலையில் சின்னவிளை கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு நடைபெறும்.

24-ந் தேதி அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் சார்பில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பிருந்து பிற்பகல் ஊர்வலம் தொடங்கி மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்படும். தோவாளை ஒன்றியம் சார்பில் தோவாளை முருகன் கோவில் அடிவாரத்தில் இருந்து பிற்பகலில் தொடங்கும் விநாயகர் சிலை ஊர்வலம் மாலை 6 மணிக்கு கீரிப்பாறை காளியம்மன் கோவில் அருகில் ஆலம்கேசம் ஆற்றில் கரைக்கப்படும்.

நாகர்கோவில்-தக்கலை

நாகர்கோவில் மாநகர் மற்றும் ராஜாக்கமங்கலம் ஒன்றியம் சார்பில் நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து பிற்பகலில் புறப்படும் விநாயகர் சிலை ஊர்வலம் மாலை 6 மணிக்கு சங்குத்துறை கடற்கரைக்கு சென்றடைந்து, சிலைகள் கரைக்கப்படும். குருந்தங்கோடு ஒன்றியம், குளச்சல் நகரம் சார்பில் திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோவில் முன்பிருந்து காலையில் தொடங்கும் ஊர்வலம் மதியம் 12 மணிக்கு மண்டைக்காடு கடலை சென்றடைகிறது. பின்னர் அங்கு சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தக்கலை ஒன்றியம் மற்றும் பத்மநாபபுரம் நகரம் சார்பில் வைகுண்டபுரம் ஸ்ரீராமர் கோவிலில் இருந்து மதியம் தொடங்கும் விநாயகர் சிலை ஊர்வலம் மாலை 5 மணிக்கு மண்டைக்காடு கடலை சென்றடைகிறது. திருவட்டார் ஒன்றியம் சார்பில் செருப்பாலூர் முத்தாரம்மன் கோவிலில் இருந்து காலையில் தொடங்கும் விநாயகர் சிலை ஊர்வலம் மதியம் 1 மணிக்கு திற்பரப்பு அருவியை சென்றடைந்து, கரைப்பு நடைபெறும்.

மேல்புறம்-கிள்ளியூர்

மேல்புறம் ஒன்றியம் சார்பில் மேல்புறம் அளப்பன்கோடு ஈஸ்வரன் கால பூதத்தான் கோவிலில் இருந்து காலையில் தொடங்கும் விநாயகர் சிலை ஊர்வலம் மதியம் 1 மணிக்கு குழித்துறை தாமிரபரணி ஆற்றுக்கு சென்றடைந்து, சிலைகள் கரைப்பு நடைபெறும். குழித்துறை நகரம் சார்பில் பம்மம் பகுதியில் இருந்து காலையில் தொடங்கும் விநாயகர் சிலை ஊர்வலம் மதியம் 1 மணிக்கு குழித்துறை தாமிரபரணி ஆற்றை அடைந்து, கரைப்பு நடைபெறும்.

கிள்ளியூர் ஒன்றியம் சார்பில் கருங்கல் கூனாலுமூடு தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து தொடங்கும் விநாயகர் சிலை ஊர்வலம் மாலை 4 மணிக்கு மிடாலம் கடலில் கரைப்பு நடைபெறும். முன்சிறை ஒன்றியம் மற்றும் கொல்லங்கோடு நகரம் சார்பில் அஞ்சுகண்ணுகலுங்கு மாடன் தர்மபுரான் இசக்கி அம்மன் ஆலயத்தில் இருந்து மதியம் தொடங்கும் விநாயகர் சிலை ஊர்வலம் மாலை 5 மணிக்கு தேங்காப்பட்டணம் கடலை சென்றடைகிறது. பின்னர் சிலை கரைப்பு நடைபெறுகிறது.

இந்த தகவல் இந்து முன்னணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story