கங்காதீஸ்வரர், கல்யாணவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்


கங்காதீஸ்வரர், கல்யாணவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 1 Sep 2023 6:45 PM GMT (Updated: 1 Sep 2023 6:46 PM GMT)

சின்னசேலம் கங்காதீஸ்வரர், கல்யாணவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் காமாட்சி அம்பாள் சமேத கங்காதீஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாணவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி கங்காதீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 5:15 மணிக்கு தேவதா மற்றும் யஜமான அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், கணபதி, நவக்கிரக ஹோமம், தனபூஜை உள்ளிட்ட பூஜைகளும், மாலை 4.45 மணிக்கு தீர்த்தசங்கிரஹணம், வாஸ்து சாந்தி, கிராமசாந்தி, பிரவேச பலி, ரக்க்ஷோக்ன ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன. தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) காலை 8.35 மணிக்கு சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், பரிவாரகலா கர்சனம் உள்ளிட்ட பூஜைகளும், மாலையில் முதல் காலை யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது. பின்னர் நாளை மறுநாள் காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் காமாட்சிஅம்பாள் சமேத கங்காதேஸ்வரர் கோவில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

அதேபோல் பெருமாள் கோவிலில் இன்று(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 9:30 மணிக்குள் மகா சுதர்சன வேள்வி மற்றும் யாகசாலை, வாஸ்து பூஜையுடன் தொடங்கி 5 மணிக்கு முதல் கால யாக பூஜை, அங்குராற்பணம் அக்னி பிரதிஷ்டை, கும்ப பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாத விநியோகத்துடன் நடைபெறுகிறது. பின்னர் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

விழாவில் மடாதிபதிகள், ஜீயர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக்கமிட்டி மற்றும் திருப்பணி கமிட்டி, ஊர் பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.


Next Story