2 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெய்வேலி, புதுச்சத்திரத்தை சேர்ந்த 2 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கத்தியை காட்டி மிரட்டல்
நெய்வேலி அருகே வடக்குத்தை சேர்ந்தவர் ரவி (வயது 45). காய்கறி வியாபாரி. இவர் கடந்த 30-ந்தேதி இந்திராநகர் செல்வதற்காக அங்குள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து, அவர் சட்டைப்பையில் வைத்திருந்த 750 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
அவரை அக்கம், பக்கத்தினர் துரத்தினர். அவர்களிடம் நான் நெய்வேலி ரவுடி வீரமணி என்னை யாராவது பிடித்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியபடி தப்பி ஓடினார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற நெய்வேலி டவுன்ஷிப் சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது. அந்த வாலிபர் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து, கத்தியை காட்டி மிரட்டி சென்று விட்டார்.
12 வழக்குகள்
இது குறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேல்வடக்குத்து சடமுனீஸ்வரன் தெரு நடேசன் மகன் வீரமணி (வயது 24) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ரவுடியான இவர் மீது நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி, பொது சொத்தை சேதம்விளைவித்தல் என 12 வழக்குகள் உள்ளது. இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதையடுத்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவின்பேரில், ரவுடி வீரமணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர். அதற்கான உத்தரவு நகலை கடலூர் சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் போலீசார் வழங்கினர்.
இதேபோல் புதுச்சத்திரத்திலும் ரவுடி ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதன் விவரம் வருமாறு:-
பெட்ரோல் குண்டு வீச்சு
கடலூர் அருகே நொச்சிக்காட்டை சேர்ந்தவர் கருணாநிதி மகன் மணிகண்டன் (28). இவர் புதுச்சத்திரம் அருகே பெரியக்குப்பம் தனியார் இரும்பு ஆலையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 22.5.2022 அன்று பணியில் இருந்த போது, மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் 10 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்களை மணிகண்டன் தடுத்து நிறுத்திய போது அவரை ஆபாசமாக பேசி பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயன்றனர்.
இது பற்றி அவர் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து. நிரபு, வீரன், புருஷோத்தமன், ஆலப்பாக்கம் குறவன்மேடு சந்திரசேகர் மகன் கோபி (27), ரகு, தமிழ்ச்செல்வன், வீரமணி, அருள்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது
இதில் கோபி மீது பெட்ரோல் குண்டு வீசியது, கொலை முயற்சி, வன்கொடுமை என 7 வழக்குகள் உள்ளன. ரவுடியான இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதையடுத்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் கோபியை புதுச்சத்திரம் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.