3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை முயற்சி
தூத்துக்குடி அருகே உள்ள சிலுவைப்பட்டியில் கடந்த 4-ந் தேதி ராதாபுரம் கூட்டப்பனையை சேர்ந்த ராயப்பன் மகன் ஆனந்த் (வயது 42) என்பவரை முன்விரோதம் காரணமாக சிலர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றனர். இதுதொடர்பாக தூத்துக்குடி பழைய ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் பாலவிக்னேஷ் (20), கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த பழனிமுருகன் மகன் சக்திகுமார் (21), சக்திவிநாயகர்புரம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் சுடலைகுமார் (19) ஆகிய 3 பேரையும் தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாலவிக்னேஷ், சக்திகுமார், சுடலைகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.