3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் மூதாட்டி கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

கடலூர்

கடலூர்

மூதாட்டி கொலை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் ராமர் மனைவி பவுனாம்பாள் (வயது 85).இவர் கடந்த 7.6.2020 அன்று வீட்டில் தனியாக இருந்த போது, யாரோ மர்மநபர் அவரை கொலை செய்து, பவுனாம்பாள் அணிந்திருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், குற்றவாளிகள் பிடிபடவில்லை.

இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கடலூர் மாவட்ட சூப்பிரண்டாக பதவி ஏற்றவுடன் வழக்கு கோப்பினை பார்வையிட்டு, சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார்.

3 பேரை பிடித்த தனிப்படை

அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பண்ருட்டி மேல்அருங்குணத்தை சேர்ந்த வேலாயுதம் (வயது 42), பிரசன்னா, மணப்பாக்கம் விஸ்வநாதன் (32) ஆகியோர் தான் பவுனாம்பாளை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதில் கைதான வேலாயுதம் மீது பண்ருட்டி, முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையங்களில் 2 கொலை வழக்குகளும், விஸ்வநாதன் மீது பண்ருட்டி, முத்தாண்டிக்குப்பம், புதுப்பேட்டை, விழுப்புரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 3 கொலை வழக்குகளும், பிரசன்னா மீது பண்ருட்டி, முத்தாண்டிக்குப்பம், விழுப்புரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 3 கொலை வழக்குகளும் உள்ளன.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இதனால் அவர்களது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், பல கொலை வழக்குகளில் தொடர்புடைய வேலாயுதம், விஸ்வநாதன், பிரசன்னா ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 பேரிடமும், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story