கொலை, கொலை முயற்சி வழக்குகளில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை, கொலை முயற்சி வழக்குகளில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கொலை வழக்கு

உடன்குடி புதுமனை கீழத் தெருவை சேர்ந்த ஆத்தங்கரை முத்து மகன் அரசன் (வயது 56) என்பவரை, பெண்ணை கொலை செய்து நகையை பறித்து சென்ற வழக்கில் குலசேகரன்பட்டினம் போலீசார் கைது செய்தனர். இதே போன்று வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரை சேர்ந்த சங்கர் மகன் சண்முகசுந்தரம் (28), திருச்செந்தூர் சந்தான மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் மகன் நாகராஜா (24) ஆகிய 2 பேரையும் கொலை முயற்சி வழக்கில் திருச்செந்தூர் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

குண்டர் சட்டம்

இவர்கள் 3 பேரையும் குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசன், சண்முகசுந்தரம், நாகராஜா ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர். நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 13 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 38 பேர் உள்பட 214 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story