4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வீரவநல்லூர் உப்புவாணியமுத்தூர் அருகே கடந்த மாதம் 19-ந்தேதி கொட்டாரகுறிச்சி, தெற்கு தெருவை சேர்ந்த கணேசன் என்ற கனி (வயது 55) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சீனியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த இசக்கிபாண்டி என்பவரின் மகன் ராஜவேல் (33), அத்தாளநல்லூர் கோட்டை தெருவை சேர்ந்த சிவன் பாண்டியன் மகன் ராஜகோபால் (30) ஆகிய இருவரையும் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
இதேபோல் கடந்த மாதம் 21-ந்தேதி கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடியை சேர்ந்த பார்வதிநாதன் (25) என்பவர் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய தூத்தூக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தை சேர்ந்த முத்துக்குட்டி மகன் இசக்கி பாண்டி (20), சுடலைமுத்து மகன் மாயாண்டி என்ற மதன் (19) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல்களை போலீசார் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.