4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லை மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள வடக்கு தாழையூத்தை சேர்ந்தவர் காசிராஜன். இவருடைய மகன் செல்வம் (வயது 23). இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழங்கினார்.

ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (30), வடக்கு தாழையூத்து சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை சேர்ந்தவர் பிரவீன் ராஜ் (30). இவர்கள் நாங்குநேரி அருகே சாமிதுரை என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை கலெக்டர் ஏற்று அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை கோவை சிறை அதிகாரியிடம் நாங்குநேரி போலீசார் நேற்று வழங்கினார்கள்.

நெல்லை அருகே உள்ள சங்கர்நகரை சேர்ந்த ராஜா (45) என்பவரை முன்விரோதம் காரணமாக கழுத்தை நெரித்துக் கொலை செய்து தீ வைத்து எரித்த வழக்கில் வெள்ளாங்கோட்டை, வலசால்பட்டியை சேர்ந்த செல்லதுரை மகன் தர்மராஜா (25) என்பவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதை கலெக்டர் ஏற்று, தர்மராஜாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு சிறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.


Next Story