4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் திருட்டு வழக்குகளில் ைகதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள, 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கொலை முயற்சி
கயத்தாறு புதுகாலனியை சேர்ந்த சுப்பிரமணி மகன் கணேசன் (வயது 32), தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் இசக்கிமுத்து (35), ராமசந்திரன் மகன் முருகன் (30) ஆகியோரை கயத்தாறு போலீசார் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். இதே போன்று கருங்குளத்தில் இருந்து ராமானுஜம்புதூர் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு தோட்டத்தில் புகுந்து காவலாளியை தாக்கி விட்டு அங்கிருந்த 37 ஆடுகளை திருடி சென்றதாக, நாங்குநேரி மறுகால்குறிச்சியை சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்து என்ற முத்துபாண்டி (28) என்பவரை சேரகுளம் போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் 4 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கணேசன், இசக்கிமுத்து, முருகன், முத்து என்ற முத்துபாண்டி ஆகிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.