கொத்தனாரை கொலை செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொத்தனாரை கொலை செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 40). கொத்தனாரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தளபதி என்பவரது குடும்பத்திற்கும் இடையே இட பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி பனையக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே அமர்ந்து இருந்த சந்தர் என்ற சுந்தர்ராஜ் (37), தளபதி (37), ரகுபதி (35), மாசி (24), ஹரிஹரன் (21) ஆகியோர் அந்த வழியாக வந்த ஜெயபாலை கிண்டல் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயபால் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்தார். அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த சுந்தர்ராஜ் தரப்பினர் ஜெயபாலை சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதில் கைது செய்யப்பட்ட சுந்தர்ராஜை திருச்சி போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படிகலெக்டர் பிரதீப் குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சுந்தர்ராஜை கைது செய்ய உத்தரவிட்டார். சிறையில் உள்ள அவருக்கு இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.