காரில் கடத்தப்பட்ட 2 கிலோ கஞ்சா பறிமுதல்தீயணைப்பு படை வீரர் போலீசில் சிக்கினார்


காரில் கடத்தப்பட்ட 2 கிலோ கஞ்சா பறிமுதல்தீயணைப்பு படை வீரர் போலீசில் சிக்கினார்
x
தினத்தந்தி 7 Jan 2023 7:30 PM GMT (Updated: 7 Jan 2023 7:31 PM GMT)

ஒரத்தநாடு அருகே காாில் கடத்தப்பட்ட 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விருதுநகர் தீயணைப்பு படை வீரர் போலீசில் சிக்கினார்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு அருகே காாில் கடத்தப்பட்ட 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விருதுநகர் தீயணைப்பு படை வீரர் போலீசில் சிக்கினார்.

கஞ்சா கடத்தல் கும்பல்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை நோக்கி நேற்று முன்தினம் இரவு சொகுசு காரில் கஞ்சா கடத்தல் கும்பல் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டை- தஞ்சை பிரதான சாலை பாப்பாநாட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு கார் மின்னல் வேகத்தில் போலீசாரின் சோதனை வளையத்தை கடந்து சென்றது.

தீயணைப்பு படை வீரர் சிக்கினார்

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இதுகுறித்து அருகில் உள்ள ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து ஒரத்தநாடு பைபாஸ் சாலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்னியின்செல்வன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு சொகுசு காரில் வந்த 3 நபர்கள் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இதையடுத்து போலீசார் விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்ற இருவரும் தம்பி ஓடி விட்டனர். இதையடுத்து காரில் இருந்த 2 கிலோ கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து பிடிபட்ட நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அந்த நபர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், இவர் அந்த பகுதியில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

தீவிர விசாரணை

இதனை தொடர்ந்து போலீசார் தொடர்புடைய தீயணைப்பு படை வீரரை தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை பட்டுக்கோட்டைக்கு அழைத்து சென்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தப்பி ஓடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story