குப்பைகளை சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு


குப்பைகளை சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:09+05:30)

பொள்ளாச்சியில் குப்பைகள் சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதாக நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் குப்பைகள் சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதாக நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிறப்பு கூட்டம்

பொள்ளாச்சி நகராட்சியில் நேற்று காலையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பொள்ளாச்சி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஒப்பந்த நிறுவனம் பணிகளை மேற்கொள்ளவும், குப்பைகளை வாங்கி தரம் பிரித்து மறு சுழற்சி செய்யும் இடத்திற்கு கொண்டு செல்ல டன்னுக்கு ரூ.5 ஆயிரத்து 980 வழங்கவும், ஒப்பந்த நிறுவனத்தை 3 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யவும் ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நகராட்சிக்கு மாதத்துக்கு சுமார் ரூ.48 லட்சத்து 51 ஆயிரமும், ஆண்டுக்கு சுமார் ரூ.5 கோடியே 82 லட்சத்து 3 ஆயிரமும் செலவாகும். இதற்கு மன்ற அனுமதி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உள்ளூர் பணியாளர்கள்

பின்னர் கவுன்சிலர் துரைபாய் பேசுகையில், தனியாருக்கு குப்பைகளை சேகரிக்கும் பணியை கொடுப்பதால் உள்ளாட்சி பிரதிநிதிகளின் அதிகாரம் குறைக்கப்படுகிறதா?. அவர்கள் வடமாநிலத்தவரை பணியமர்த்தினால் உள்ளூர் பணியாளர்களின் வாழ்வாதாரம் என்னவாகும் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு, குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து வழங்கும் பணியை தனியாருக்கு வழங்குவதன் மூலம் எந்த பாதிப்பும் இல்லை. 90 சதவீதம் உள்ளூர் பணியாளர்களுக்குதான் பணி வழங்கப்படும் என்று நகராட்சி தலைவர் கூறினார்.

அதிகாரிகள் கண்காணிப்பு

இதுகுறித்து நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

குப்பைகளை சேகரித்து பிரித்து கொடுக்கும் பணி தனியாருக்கு வழங்கப்பட உள்ளது. பஸ் நிலையம், மார்க்கெட், உரக்கிடங்கு, சாக்கடை கால்வாயை சுத்தம் செய்தல், சாலையோரங்களில் மண் அகற்றுதல், செடிகளை வெட்டுதல் உள்ளிட்ட பணிகளை நிரந்தர பணியாளர்கள் செய்வார்கள். தனியார் செய்யும் பணிக்கு நகராட்சி வாகனங்கள் வழங்கப்படும். அதற்கு பேட்டரி வாகனங்களுக்கு தினமும் ரூ.100, லாரிகளுக்கு ரூ.400, மினி ஆட்டோவிற்கு ரூ.200 என்று வாடகை வசூலிக்கப்படும். அந்த நிறுவனத்தில் 137 பணியாளர்கள், 7 மேற்பார்வையாளர்கள், 22 டிரைவர்கள் பணிபுரிவார்கள். அவர்களது பணியை நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story