தெருக்களில் கொட்டப்படும் குப்பைகள்


தெருக்களில் கொட்டப்படும் குப்பைகள்
x
தினத்தந்தி 11 July 2023 8:30 PM GMT (Updated: 11 July 2023 8:30 PM GMT)

சேரங்கோடு ஊராட்சியில் குப்பை கொட்ட இடவசதி இல்லாததால், தெருக்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

நீலகிரி

பந்தலூர்

சேரங்கோடு ஊராட்சியில் குப்பை கொட்ட இடவசதி இல்லாததால், தெருக்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

பொதுமக்கள் எதிர்ப்பு

பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதிகளில் வீடுகள், கடைகள், ஓட்டல்களில் சேகரமாகும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் சேகரித்து வந்தனர். பின்னர் ஊராட்சி லாரிகளில் குப்பைகள் ஏற்றி எருமாடு அருகே இன்கோ நகரில் கொட்டப்பட்டது. அங்கு மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது.

அங்கு மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. இதற்கிடையே அப்பகுதியில் குப்பைகள் அதிகமாக குவிந்ததால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து, நோய் பரவும் அபாயம் காணப்பட்டது. இதையடுத்து இன்கோ நகரில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் சேரம்பாடி அருகே புஞ்சகொல்லி குழிவயல் பகுதியில் வருவாய்த்துறை நிலத்தில் குப்பை கொட்ட சேரங்கோடு ஊராட்சிக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

அதன்படி, கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா மற்றும் வருவாய்த்துறையினர் நிலத்தை தேர்வு செய்து, குப்பை கொட்ட அனுமதித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதற்கிடையே அங்கேயும் குப்பை கொட்டக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைபிடித்தனர். இதனால் குப்பை கொட்ட இடமின்றி சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இதன் காரணமாக சேரம்பாடி, எருமாடு, தாளூர் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதில் உணவு கழிவுகளை தேடி தெரு நாய்கள், காட்டுப்பன்றி போன்றவை வந்து செல்கின்றன. தெருக்கள் மட்டுமின்றி, மயான பகுதியிலும் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் ஊராட்சி பகுதியே குப்பைகளாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, குப்பை தொட்டிகள் குப்பைகளால் நிரம்பி வழிகிறது. குப்பைகள் அகற்றப்படாததால், தெருக்களில் கொட்டி வருகிறோம். இதனால் சுகாதார சீர்ேகடு ஏற்பட்டு உள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சேரங்கோடு ஊராட்சியில் குப்பைகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story