குப்பைகள் நிறைந்த பேரூர் படித்துறை

பேரூர் படித்துறை குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்
பேரூர்
பேரூர் படித்துறை குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பேரூர் படித்துறை
முக்தி தலம் என்று அழைக்கப்படும் கோவை பேரூரில் வரலாற்று சிறப்பு மிக்க பட்டீசுவரர் கோவில் உள்ளது. புராணத்தில் காஞ்சிமாநதி என்று அழைக்கப்படும் நொய்யல் ஆறு இந்த கோவில் அருகேதான் செல்கிறது.
இந்த ஆற்றில் உள்ள படித்துறை மிகவும் புகழ்வாய்ந்தது. முன்பு இங்கு 18 படிகள் இருந்ததாகவும், அவற்றை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்து சென்றதாகவும் கூறுவது உண்டு. உயிரிழந்தவர்களின் எலும்புகளை படித்துறையில் உள்ள ஆற்றில் போட்டால் வெண் கற்களாக மாறிவிடும் என்றும் நம்பப்படுகிறது.
இதனால் இறந்தவர்களுக்கு திதி கொடுக்க பலர் வருகின்றனர். இந்த அளவுக்கு புகழ்வாய்ந்த பேரூர் நொய்யல் படித்துறை தற்போது பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் குவிந்து அலங்கோல மாக காட்சி அளிக்கிறது.
இது இங்கு வருபவர்களை முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது. மேலும் படித்துறையில் உள்ள படிக்கட்டுகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:-
சுத்தம் செய்வது இல்லை
பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு விசேஷ நாட்கள் தவிர ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை தவிர மற்ற நாட்களிலும் பக்தர்கள் அதிகம் வருகிறார்கள். அதில் பலர் நொய்யல் ஆற்று படித்துறைக்கு வந்து ஆற்றங்கரை விநாயகர் கோவில், சப்த கன்னிமார்களை வழிபட்டுவிட்டு செல்கிறார்கள்.மாதந்தோறும் அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் இறந்த முன்னோர்க ளுக்கு திதி மற்றும் ஈமக்கிரியை செய்கின்றனர்.
இதனால், பேரூர் நொய்யல் படித்துறை மற்றும் ஆற்றின் கரை யோர பகுதிகளில் ஏராளமான குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. அதை யாரும் சுத்தம் செய்வது இல்லை.
உடனடி நடவடிக்கை
இதனால் படித்துறைக்கு செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. ஆடிப்பெருக்கையொட்டி படித்துறையில் ஏராளமா னோர் வந்தனர். அவர்கள் விட்டுச்சென்ற குப்பைகள் மற்றும் கழிவுகள் படித்துறை அருகே குவிந்து கிடக்கிறது. முன்னோர்க ளுக்கு வைத்த படையல்கள், இலைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.
இதனால் அங்கு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது. இது வேதனை அளிக்கிறது. எனவே பேரூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து படித்துறை மற்றும் நொய்யல் ஆற்றோர பகுதியில் குவிந்து உள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை உடனடியாக அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






