அரசு கல்லூரி மாணவர் விடுதி முன் குவிந்து கிடக்கும் குப்பை
திருச்சி பறவைகள் சாலையில் அரசு கல்லூரி மாணவர் விடுதி முன் வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
திருச்சி பறவைகள் சாலையில் அரசு கல்லூரி மாணவர் விடுதி முன் வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மாணவர் விடுதி
திருச்சி மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட பறவைகள் சாலையில் அரசு ஆண்கள் கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. அதன் அருகில் ரேஷன் கடை, அறிவுசார் மையம் மற்றும் வீடுகள் அமைந்துள்ளன. வழக்கமாக தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சேகரிக்கும் குப்பைகளை உரம் தயாரிக்கும் இடத்துக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்வது வழக்கம்.
ஆனால், இந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தினமும் மாணவர் விடுதிக்கு முன் சாலையிலேயே மாநகராட்சி ஊழியர்கள் கொட்டி வைத்துள்ளனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், குப்பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள வீடுகளுக்குள்ளும், விடுதிக்குள்ளும் செல்கிறது.
இதனால் மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் தூய்மைப்பணியாளர்கள் கேட்பதாக இல்லை. அதே இடத்தில் தான் நாட்கள் கணக்கில் குப்பைகளை கொட்டி தேக்கி வைத்துள்ளனர். தற்போது கடந்த மூன்று நாட்களாக குப்பை அகற்றப்படாமல் உள்ளது.
கோரிக்கை
தூய்மைப்பணியாளர்களை கண்காணிக்க வேண்டிய சுகாதார ஆய்வாளரும், அப்பகுதி கவுன்சிலரும் இவற்றை கண்டுகொள்வதில்லை. இதே நிலைதான் பல வீதிகளில் நடக்கிறது. மேலும் தூய்மையான மாநகராட்சி என்று பெயர் எடுக்க ஆங்காங்கே குப்பையில்லா வீதி என்று பெயர்பலகை வைத்து பொதுமக்களை வீதியில் குப்பை கொட்ட வேண்டாம் என்று கூறும் மாநகராட்சி நிர்வாகம் இதுபோன்று குப்பைகளை சாலையில் கொட்டும் தூய்மைப்பணியாளர்களை கண்காணிக்காத ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து வீதிகளில் குப்பை கொட்டாமல் இருக்க அவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறவும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.