ஊட்டி மார்க்கெட்டில் மலைபோல் குவியும் குப்பைகள்-உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


ஊட்டி மார்க்கெட்டில் மலைபோல் குவியும் குப்பைகள்-உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Jun 2023 12:30 AM IST (Updated: 8 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி மார்க்கெட்டில் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் காட்சியளிக்கிறது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி மார்க்கெட்டில் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் காட்சியளிக்கிறது.

நகராட்சி மார்க்கெட்

நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறிகளை அறுவடை செய்த பின்னர் சிறு, குறு விவசாயிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

அங்கு மொத்த வியாபாரிகள் ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டமைக்கப்பட்ட ஊட்டி நகராட்சி மார்க்கெட் இந்தியாவின் முன்னோடி மாதிரி சந்தையாக கருதப்பட்டது. இங்கு 1,500 நிரந்தர கடைகளும், 500 தற்காலிக கடைகளும் உள்ளன. இந்த மார்க்கெட்டுக்கு தினமும் 3500 முதல் 4000 வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். மேலும் வாரயிறுதி நாட்களில் 4,000 முதல் 5,000 வாடிக்கையாளர்கள் வருவார்கள். வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இங்கு 15 நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்

பழமையான மார்க்கெட்டாக இருந்தாலும், இங்கு பலத்த மழை பெய்யும் சமயங்களில் எல்லாம் கடைகள் மற்றும் வளாகங்களில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. மழைநீர் செல்லும் வடிகாலில் அடைப்பு ஏற்படுவதால் இதேநிலை தொடர்கிறது. தற்போது இந்த பிரச்சினையுடன் கூடுதலாக குப்பை பிரச்சினையும் சேர்ந்துள்ளது.

மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் காலை நேரத்தில் கடைகள் திறக்க தாமதமாவதால், குப்பை சேகரிப்பவர்களிடம் குப்பையை கொடுக்க முடிவதில்லை. இதனால் மார்க்கெட்டில் குப்பைகளை சேகரிக்கும் தொட்டியில் மலை போல் குப்பை குவிக்கிறது. மேலும் குப்பை சேகரிக்கும் தொட்டியில் போடுவதற்கு பதிலாக அதன் அருகில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ஊட்டி மார்க்கெட்டில் தினசரி 4 டன் குப்பைகள் சேகரமாகிறது. 2016-ம் ஆண்டு மத்திய அரசின் உத்தரவுக்கு பின்னர் குப்பை தொட்டிகள் வைக்கப்படுவது கிடையாது. அதற்கு பதிலாக, நேரடியாக குப்பை சேகரிக்கப்படுகிறது. மார்க்கெட் கடைகள் திறக்க தாமதமாவதால் மார்க்கெட் வியாபாரிகளிடம் குப்பைகளை சேகரிக்க முடியாததால், அங்கு மட்டும் குப்பை சேகரிக்கும் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் பலரும் அதில் கொட்டாமல் வெளியில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது, என்றனர்.


Next Story