வைத்தியம்பேட்டை குளத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகள்
மணல்மேடு அருகே வைத்தியம்பேட்டை குளத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணல்மேடு:
மணல்மேடு அருகே வைத்தியம்பேட்டை குளத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரிய குளம்
மணல்மேடு அருகே வரதம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வைத்தியம்பேட்டை கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பயணிகள் நிழலகத்தையொட்டி சுமார் 1 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர்.
மேலும் அப்பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகள் குளத்தில் உள்ள தண்ணீரை குடித்து தாகம் தீர்த்து வந்தன. இவ்வாறு பயன்பாட்டில் இருந்த இந்த குளத்தில் தற்போது குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும் குளம் தூர்ந்து தண்ணீர் மிகவும் குறைந்து காணப்படுகிறது.
தேங்கி கிடக்கும் குப்பைகள்
இதனால் இந்த குளத்தை கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குளத்தின் படித்துறையும் உடைந்து சேதமடைந்து உள்ளது. குளத்தை சுற்றி கருவேல மரங்கள் வளர்ந்து இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இனி வரும் காலம் மழை காலம் என்பதால், அந்த பகுதியில் தேங்கும் மழைநீர் குளத்தில் வடிவதில் சிரமம் ஏற்படும். எனவே வைத்தியம்பேட்டை குளத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என்று பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.