விஷ வாயு தாக்கி குழந்தைகள் உள்பட 15 பேருக்கு வாந்தி-மயக்கம்


விஷ வாயு தாக்கி குழந்தைகள் உள்பட 15 பேருக்கு வாந்தி-மயக்கம்
x

திருப்பூரில் சலவைப்பட்டறையில் இருந்து வெளியேறிய விஷ வாயு தாக்கி குழந்தைகள் உள்பட 15 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. கலெக்டர்-எம்.எல்.ஏ.க்கள் நேரில் பார்வையிட்டனர்.

திருப்பூர்

திருப்பூரில் சலவைப்பட்டறையில் இருந்து வெளியேறிய விஷ வாயு தாக்கி குழந்தைகள் உள்பட 15 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. கலெக்டர்-எம்.எல்.ஏ.க்கள் நேரில் பார்வையிட்டனர்.

விஷ வாயு கசிவு

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு திருக்குமரன் நகர் பகுதியில் பிரபல பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான சலவைப்பட்டறை உள்ளது. இந்த பட்டறையில் இருந்து நேற்று முன்தினம் இரவு நச்சுத்தன்மை கொண்ட விஷ வாயு வெளியேறியது.

இதன் தாக்கம் நேற்று காலை வரை இருந்துள்ளது. இதனால் அங்குள்ள 3 வீதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன், வாந்தி, மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் 11 பேர் உள்பட 15 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த தகவல் காட்டுத்தீ போல அந்த பகுதியில் பரவியது.

கலெக்டர்-எம்.எல்.ஏ.க்கள்

இதையடுத்து சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். மேலும் கலெக்டர் கிறிஸ்துராஜ், எம்.எல்.ஏ.க்கள் க.செல்வராஜ், கே.என்.விஜயகுமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து வெறியேறியது விஷ வாயுவா அல்லது அங்குள்ள தண்ணீரில் இருந்து காற்று மூலமாக பரவிய துர்நாற்றமா என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்யுமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உத்தரவிட்டனர்.

மேலும் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக செய்து கொடுக்குமாறும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சலவைப்பட்டறையில் உள்ள தண்ணீர் மற்றும் புகை வெளியேறும் இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

இதேபோல் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 பேரும் நல்ல நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பூரில் விஷவாயு தாக்கி குழந்தைகள் உள்பட 15 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story