வீராணத்தில்உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம்
வீராணத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
திருவெண்ணெய்நல்லூர்,
தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கண்டமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 2-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வீராணம் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் தெய்வகணபதி தலைமை தாங்கினார். பொருளாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சத்தியமூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில், கண்டமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சிறப்பாக இயங்கி வருவதாகவும், இந்த நிறுவனத்துக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், வேளாண் எந்திரங்கள் மற்றும் மதிப்பு கூட்டுப் பொருட்கள் தயாரிக்க தேவையான எந்திரங்களையும் வழங்க தயாராக உள்ளது. மேலும் கண்டமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தங்களுடைய விலை பொருட்களை தரம் பிரித்து மதிப்பு கூட்டி விற்பனை செய்து மென்மேலும் லாபமடைந்து விழுப்புரம் மாவட்டத்திலேயே சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனமாக மாற வேண்டும் என்றார். முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட பங்குதாரர்களுக்கு 2022-23-ம் ஆண்டில் கிடைத்த லாபத்திற்கான ஈவுத்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து கண்டமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு) வித்யா, உதவி தோட்டக்கலை அலுவலர் கோபி ஆகியோர் கலந்து கொண்டு துறை சார்ந்த திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார்கள். இந்த கூட்டத்தில் வட்டார உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) சீனுவாசன், இயக்குனர்கள் பாலசுப்பிரமணி, அமுதா, செல்வம், கணக்காளர் மகேஸ்வரி, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன் உள்பட பாக்கம், வீராணம், ராம்பாக்கம் ஆகிய கிராமங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.