சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு சான்றிதழ்
சேலம்
சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது.
புவிசார் குறியீடு சான்றிதழ்
சேலம் குரங்குச்சாவடியில் உள்ள சேகோசர்வ் அலுவலகத்தில் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். சேகோசர்வ் செயலாட்சியர் லலித் ஆதித்யநீலம் முன்னிலை வகித்தார்.
இதில், தமிழ்நாடு அரசு புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் நோடல் அலுவலர் சஞ்சய்காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு சான்றிதழை வழங்கினார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
சேலத்தில் உள்ள சேகோசர்வ் தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில் கூட்டுறவு சங்கமாகும். இங்கு 374 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில் 60 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெற்றிருப்பது பெருமை படக்கூடியது.
இதன்மூலம் சேலம் ஜவ்வரிசிக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் உரிய அங்கீகாரம் மற்றும் தனித்துவம் கிடைக்கும். மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் அனைத்து விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடக்கும்.
மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் மதிப்பு அதிகரிக்கும். மேலும், ஜவ்வரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அதிகளவில் வாய்ப்பு உள்ளது. இதனால் மாவட்டத்தின் பொருளாதார நிலை மேலும் உயரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய சந்தையை...
விழாவில், தமிழ்நாடு அரசு புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் நோடல் அலுவலர் சஞ்சய்காந்தி பேசும்போது, 'இந்தியாவில் 490 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 59 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது. சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது உலக அளவில் அதன் புதிய சந்தையை விரிவுப்படுத்த முடியும். வெளிநாடுகளில் நடக்கும் கண்காட்சியிலும் சேலம் ஜவ்வரிசியை காட்சிப்படுத்தலாம். அதற்கான செலவு முழுவதையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். வெளிநாடுகளுக்கு ஜவ்வரிசியை ஏற்றுமதி செய்யலாம்' என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவக்குமார், சேகோசர்வ் சங்க உறுப்பினர்கள், மரவள்ளிக்கிழங்கு வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.